Last Updated : 04 May, 2018 01:05 PM

 

Published : 04 May 2018 01:05 PM
Last Updated : 04 May 2018 01:05 PM

கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை: இலவச ஸ்மார்ட்போன், ரூ.ஒரு லட்சம் கோடி வேளாண் கடன் தள்ளுபடி, பசுவதை தடுப்புச் சட்டம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன் பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.ஒரு லட்சம் கோடிவரை கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், ரூ.1.5 லட்சம் கோடிக்கு நீர்ப்பாசனத் திட்டம், பசுவதைச்சட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 15-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஒருபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மறுபுறம் பாஜகவின் தலைவர்கள் பிரதமர் மோடி, அமித் ஷாவும் தீவிரமாகக் களமாடிவருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பெங்களூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

நம்ம கர்நாடகா நம்ம மக்கள் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் பெண்கள், ஏழைக் குடும்பங்கள், மாணவர்கள், இளைஞர்கள்,விவசாயிகளுக்கென தனித்தனியாக சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்குதல், விவசாயிகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நீர்ப்பாசனத் திட்டங்களை அறிமுகம் செய்தல், தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் ரூ. ஒரு லட்சம் கோடியை தள்ளுபடி செய்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக இருந்தன.

மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் கட்சியின் போது மாநிலத்தில் நிதிநிலைமை எப்படி இருந்தது என்பது குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் எடியூரப்பா அறிவித்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைபெண்கள் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் தங்கம் வழங்கப்படும், குறைந்தவிலையில் தரமான உணவுகள் வழங்கும் அன்னபூர்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

கடந்த 2012-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுவதைச் சட்டம், மீண்டும் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள எஸ்சி பிரிவு மக்களுக்காக நவீன குடியிருப்புக்கள் கட்ட ரூ.8500 கோடி ஒதுக்கப்படும். பாரம்பரிய தொழில்களைச் செய்துவருபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

கர்நாடக மாநிலத்தில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும், ஏழைக் குடும்பங்களின் மருத்துக்காப்பீடுக்காக ரூ.5 லட்சம் செலவில் காப்பீடு திட்டம் அறிமுகம்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு ஒரு ரூபாயில் சானட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்படும் போது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை உறுதி செய்யும் பொருட்டு, ரெய்தா பந்து மாரக்கெட் இன்டர்வென்ஷன் நிதி உருவாக்கப்படும்.

கால்நடைகள் வளர்ப்பு, மேம்பாட்டுக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x