Published : 04 May 2018 11:04 AM
Last Updated : 04 May 2018 11:04 AM

பெங்களூரு நகரத்தை ‘நரகமாக’ மாற்றி விட்டார் - சித்தராமையா மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூரு நகரத்தை, மிக மோசமான பாவ நரகமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார் என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டி பேசினார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கி கடுமையாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸையும், அம்மாநில முதல்வர் சித்தராமையாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:

நாட்டின் மிக முக்கிய நகரமாக பெங்களூரு விளங்கி வருகிறது. அந்நகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு வகையிலும் நிதி உதவி செய்து வருகிறது. திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் 836 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் சித்தராமையா அரசு, பெங்களூரு வளர்ச்சிக்காக வெறும் 12 கோடி ரூபாயை மட்டும் செலவழித்துள்ளது. எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.

ஆனால் பெங்களூரு நகரை மிக மோசமான நகரமாக காங்கிரஸ் அரசு மாற்றி விட்டது. காங்கிரஸ் அமைச்சர்கள் செய்யும் ஊழலுக்கு அவர்களுக்கு தங்க மெடல் வழங்க வேண்டும். நில மாபியாக்களுடன் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும், பெங்களூரு நகரில் இடங்களை விற்பனை செய்து பல கோடி ஊழல் செய்துள்ளனர். இதன் காரணமாக நகரத்தின் அமைப்பு மோசமடைந்து இந்நகரம் இன்று பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு மிக கெட்டுப்போயுள்ளது. எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்யமே நடக்கிறது. ரவுடிகளின் துணையுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் வர்த்தகர்களை தாக்குவது, அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் முதல்வர் சித்தராமையாவுக்கு எதை பற்றியுமே கவலை இல்லை.

‘சிலிகான் வேலி’ தற்போது சிலிகான் நரகமாகி விட்டது. ‘கார்டன் சிட்டி’ தற்போது கார்பேஜ் (குப்பை) சிட்டி ஆகி விட்டது கம்யூட்ட்ர் கேபிடல் கிரைம் கேபிடலாகி விட்டது. ஸ்டார்ட் ஹப் தற்போது ஓட்டை ஹப் ஆகி விட்டது. பெங்களூரு நகரத்தில் மிக மோசமான கலாச்சார சீரழிவு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் ஆளும் காங்கிரஸூம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுமே காரணம். இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x