Published : 04 May 2018 10:15 AM
Last Updated : 04 May 2018 10:15 AM

கர்நாடக பாஜக எம்எல்ஏ மரணம்: தேர்தல் பிரச்சாரத்தில் மாரடைப்பு

கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த தற்போதைய எம்எல்ஏவும், ஜெயநகர் தொகுதி வேட்பாளருமான விஜய் குமார் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கி கடுமையாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய்குமாரும் (வயது 60) வழக்கம் போல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று மாலை தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் அவர் திருமணமாகாதவர். அதே தொகுதியின் இரண்டு முறை எம்எல்ஏவான அவர் மக்கள் செல்வாக்கு பெற்றவர் எனவே அவரை கட்சி மேலிடம் மீண்டும் வேட்பாளராக அறிவித்தது. விஜயகுமார் தற்போது மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x