Published : 04 May 2018 07:57 AM
Last Updated : 04 May 2018 07:57 AM

நிர்மலா சீதாராமன் கர்நாடகாவை சேர்ந்தவரா?: மோடியை விமர்சிக்கும் கன்னடர்கள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெல்லாரியில் நடந்த பிரச்சார கூட்ட‌த்தில் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “பாஜக எப்போதும் பெண்களுக்கு உரிய மதிப்பை அளிக்கும். எனது ஆட்சியில் கூட கர்நாடகாவை சேர்ந்த‌ பெண் ஒருவரை (நிர்மலா சீதாராமன்) தான் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன். அதே போல‌ கர்நாடகாவை சேர்ந்த வெங்கையா நாயுடுவை பாஜக துணை குடியரசுத் தலைவராக்கி இருக்கிறது” என்றார்.

தமிழரான நிர்மலா சீதாராமனை கர்நாடகாவை சேர்ந்தவர் என மோடி தவறாக குறிப்பிட்டதால் கன்னடர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதில், “தமிழரான நிர்மலா சீதாராமன் ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்டபோது கன்னட அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் கன்னடர்களின் வாக்குகளை பெறுவதற்காக பிரதமராக இருக்கும் மோடி இப்படி பொய் சொல்லக்கூடாது” என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி, “நானே மனதால் கன்னடர். பசவண்ணர், விஸ்வேஸ்வரய்யா வாழ்ந்த‌ கர்நாடக மண்ணில் கால் வைத்ததற்காக பெருமைப்படுகிறேன். கன்னடர்கள் எனது சகோதரர்கள்” என்றார். அதற்கு முதல்வர் சித்தராமையா, “கன்னடர் என பெருமை பேசும் மோடி ஏன் கர்நாடகாவின் தனிக் கொடி கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. கன்னடராக இணைந்திருக்கும் மோடி ஏன் கர்நாடகா மீது இந்தியை திணிக்கிறார்?” என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x