Last Updated : 04 May, 2018 07:53 AM

 

Published : 04 May 2018 07:53 AM
Last Updated : 04 May 2018 07:53 AM

கர்நாடக மக்களின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் மோடி புகழ்ந்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: மஜத தலைவர் தேவகவுடா திட்டவட்டம்

கர்நாடக மக்களின் ஆதரவை பெறுவதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி என்னை புகழ்ந்திருக்கிறார். அவர் புகழ்ந்தாலும் நான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேவகவுடாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். ராகுலின் இந்தச் செயலை சாடிய பிரதமர் நரேந்திர மோடி, “வயதில் மூத்த தலைவரான தேவகவுடாவை ராகுல் காந்தி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தேவகவுடா கர்நாடகாவின் மிகப்பெரிய தலைவர். அவர் எனது வீட்டுக்கு வந்தபோது நான் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டேன்” எனத் தெரிவித்திருந்தார். தேவகவுடாவை பிரதமர் புகழ்ந்து பேசியதால், கர்நாடகாவில் பாஜக - மஜத கூட்டணி உருவாகக்கூடும் என பேச்சு எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் தேவகவுடா கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸும், பாஜகவும் எவ்வித வளர்ச்சித் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. விவசாயிகளுக்காக எத்தகைய நல்ல திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கர்நாடகாவில் குற்ற சம்பவங்களும், வகுப்புவாத பிரச்சினைகளும் அதிகரித்துவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், இந்த தேர்தலில் மஜத-வை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர். எனவே குமாரசாமி முதல்வராவது உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னைப் பற்றியும், மஜத பற்றியும் விமர்சித்ததை கேள்விப்பட்டேன். அவர் முதிர்ச்சி இல்லாமல் பேசி இருக்கிறார். கர்நாடக அரசியலை இன்னும் அவர் முழுமையாக கற்க வேண்டும். அதேபோல, பிரதமர் மோடி என்னை புகழ்ந்திருப்பதும் பெரிய விஷயம் இல்லை.

ஒருவேளை, கர்நாடக மக்களின் ஆதரவை பெறுவதற்காக மோடி என்னை புகழ்ந்திருக்கிறார் என நினைக்கிறேன். அவர் புகழ்ந்ததற்காக நான் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை பல முறை தெளிவுபடுத்தி விட்டேன். மஜத தனித்து ஆட்சி அமைக்கும். மோடி என்னைப்பற்றி பேசுவதைக் காட்டிலும், விவசாயிகளை பற்றி, மகதாயி நதி விவகாரம் பற்றி பேச வேண்டும். இது பற்றியெல்லாம் பேசாமல் மோடி மவுனம் காப்பது ஏன்? என தேவகவுடா கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x