Published : 04 May 2018 07:38 AM
Last Updated : 04 May 2018 07:38 AM

பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தை வலிமையாக்குகிறது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

‘‘பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தை வலிமையாக்குகிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாடப்படும் ஐ.நா. அறிவித்தது. அதன்படி மே 3-ம் தேதியான நேற்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நமது நோக்கத்தை இந்த தினத்தில் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம். ஜனநாயகத்தை வலிமையாக்க வேண்டுமென்றால் அதற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம். பத்திரிகை சுதந்திரத்துக்காக அயராது பாடுபட்டு வருபவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது, இந்த சமுதாயம் துடிப்புள்ளதாகச் செயல்பட வழிவகுக்கிறது.

பத்திரிகை சுதந்திரத்தை பேணி காக்க சமூக வலைதளங்களிலும் மக்கள் ஏராளமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய பங்களிப்புக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‘உலக பத்திரிகை சுதந்திர அட்டவணை -2018’ சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில் 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திரத்தை ஆய்வு செய்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இந்தியா 138-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்தியா 2 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்தான் காரணம் என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்-அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x