Last Updated : 04 May, 2018 07:33 AM

 

Published : 04 May 2018 07:33 AM
Last Updated : 04 May 2018 07:33 AM

காவிரி மேலாண்மை வாரியம் கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்ற வளாகத்தில் தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். இதில் அரியலூரைச் சேர்ந்த ஒரு விவசாயி மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை எதிர்பார்த்து தமிழகத்தில் இருந்து இளங்கீரன் தலைமையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 15 பேர் டெல்லி வந்திருந்தனர். பாதுகாப்பு போலீஸாருக்கு சந்தேகம் வராத வகையில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அங்கு தங்களுக்கு சாதகமான உத்தரவு வராததால் அதிருப்தி அடைந்தனர்.

இதனால், யாரும் எதிர்பாராத வகையில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் திடீரென கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தற்கொலை முயற்சி

இதற்கிடையே, அரியலூர் மாவட்ட விவசாயியான தட்சணாமூர்த்தி உச்ச நீதிமன்ற வளாகத்தின் ஓரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இறங்கி வருமாறு பலரும் கோரினர். அதை அவர் மறுத்து விட்டார். இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார் மரத்தில் ஏறி தட்சிணாமூர்த்தியை கீழே இறக்கினர்.

இதற்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு விவசாயி மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு தட்சிணாமூர்த்தி உட்பட போராட்டம் நடத்திய அனைவரையும் திலக் மார்க் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு மதியம் வரை அமர வைத்திருந்த அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என எதிர்பார்த்து ஏமாந்தோம். வெறும் 4 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிட்டிருப்பது போதாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது கவலைக்குரியது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, நீர் திறந்துவிடப்பட்டால்தான் இந்த வருடம் ஒரு போகம் சாகுபடியாவது செய்ய முடியும். இங்கு போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் என்பது தெரிந்திருந்தாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்தை ஈர்க்கவே போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x