Published : 04 May 2018 07:02 AM
Last Updated : 04 May 2018 07:02 AM

பஸ் கவிழ்ந்து தீப்பற்றியது: பிஹாரில் 27 பேர் பலி

பிஹாரில் பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்து தீப்பிடித்து 27 பேர் உயிரிழந்தனர்.

பிஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் இருந்து டெல்லிக்கு பயணிகள் பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து நேற்று பிஹாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம், கோட்வா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென்று வேகமாகப் பரவியது. இதில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை முழுமையாக அணைத்தனர். விபத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் கூறியபோது, “ஏசி பேருந்து என்பதால் ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தன. இதனால் பயணிகளால் தப்பிக்க முடியவில்லை” என்று தெரிவித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உபேந்திர குமார் சர்மா ஆய்வு நடத்தினர்.

இந்த விபத்து குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x