Published : 04 May 2018 06:58 AM
Last Updated : 04 May 2018 06:58 AM

டெல்லியில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: விருதுகளை 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் வழங்கியதால் சர்ச்சை; 70-க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பு

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார். இதனிடையே அனைவருக்கும் குடியரசுத்தலைவர் கையால் விருது வழங்கவில்லை எனக் கூறி 70-க்கும் மேற்பட்டோர் விழாவை புறக்கணித்தனர்.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் விருது வழங்கும் விழா நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. முதலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.

பின்னர் 5.30-க்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 11 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், துறை செயலாளர் நரேந்திர குமார் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் இந்தி நடிகர் வினோத் கன்னாவுக்கு அறிவிக்கப்பட்ட தாதா சாகேப் பால்கே விருதை (மரணத்துக்கு பிந்தைய) அவர் சார்பில் அவரது மகன் அக்ஷய் கன்னா பெற்றுக் கொண்டார்.

‘மாம்’ இந்தி படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருது (மரணத்துக்கு பிந்தைய) நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டது. அவரது சார்பில் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் ஜான்வி தனது தாயின் சேலையை அணிந்து வந்திருந்தார்.

மேலும் சிறந்த நடிகருக்கான விருது வங்க நடிகர் ரித்தி சென் (நகர் கிர்தன்), சிறந்த திரைப்படத்துக்கான விருது வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாம் திரைப்படம்), சிறந்த பின்னணி இசை (மாம்) மற்றும் சிறந்த பாடலுக்கான (காற்று வெளியிடை) விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும் (காற்று வெளியிடை படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடல்) வழங்கப்பட்டது. துணை நடிகைக்கான விருது திவ்யா தத்தா (இராடா), சிறந்த பிரபலமான படத்துக்கான விருது பாகுபலி-2-க்கும் வழங்கப்பட்டது.

முன்னதாக, 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்குவார் என்றும், மீதமுள்ள 120 பேருக்கும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் திடீரென கூறப்பட்டது. இதனால் விருது பெறுவதற்காக டெல்லி வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.

அனைவருக்கும் குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்க வேண்டும் என கடிதம் எழுதினர். இந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால் 70-க்கும் மேற்பட்டோர் இவ்விழாவை புறக்கணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x