Published : 04 May 2018 06:51 AM
Last Updated : 04 May 2018 06:51 AM

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் புழுதிப் புயல், மழைக்கு 114 பேர் பலி: 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பயங்கர புழுதிப் புயலுக்கு 114 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நிலைமையை சீர்செய்யும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை நேற்று முன்தினம் இரவு கடுமையான புழுதிப் புயல் தாக்கியது. பலத்த மழையும் கொட்டியது. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாநிலங்களின் பெரும்பாலான பகுதி கள் இருளில் மூழ்கின.

உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை, இந்தப் புழுதிப் புயலுக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர். ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, அம்மாநிலத்தின் பிஜ்னோர், பரேலி, சஹரான்பூர், பெரோசாபாத், முசாபர்நகர், மதுரா, கான்பூர், சீதாபூர், மிர்ஸாபூர் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. புயலால் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கானோர் கோயில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

புழுதிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் தோல்பூர், பரத்பூர், அல்வர் மாவட்டங்களை புழுதிப் புயல் சூறையாடியது. புழுதிப் புயலுக்கு இங்கு 38 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முதல்வர் வசுந்தரா ராஜே உத்தரவின்பேரில், மாநிலத்தில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புய லால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்தப் புழுதிப் புயலுக்கு மேற்குவங்கத்தில் 8 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும் பலியாகினர்.

பிரதமர் இரங்கல்

புழுதிப் புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘‘இந்தப் பேரிடர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். புய லால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x