Last Updated : 30 Apr, 2018 05:44 PM

 

Published : 30 Apr 2018 05:44 PM
Last Updated : 30 Apr 2018 05:44 PM

4 ஆண்டுகள் முயற்சிக்கு பின் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற இளைஞர்: குவியும் பாராட்டுகள்

 

4 ஆண்டுகள் முயற்சிக்குப்பின், பார்வைதிறன் அற்ற இளைஞர் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய அளவில் 923 ரேங்க் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவின் புறநகரான பீட் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் மன்கலே(வயது25) பிறக்கும்போதே, 75 சதவீதம் பார்வை குறைபாட்டுடன் பிறந்தார். இவரின் தந்தை குடிநீர் குழாய் பழுதுநீர்க்கும் பணி செய்து வந்தார். ஜெயந்த் பள்ளிப்படிப்பு படிக்கும்போது அவரின் தந்தையும் காலமாகி விட்டார்.

மிகுந்த ஏழ்மையான நிலையில் குடும்பத்தை நடத்திவந்த ஜெயந்த்தின் தாயும், சகோதரியும் வேலைக்குச் சென்று அவர் படிப்பதற்கு தேவையான உதவிகளைச் செய்தனர். சிலநேரங்களில் வீட்டில் ஊறுகாய், மசாலா பொருட்கள், உணவுப்பொருட்கள் செய்துவிற்பனை செய்து பணம் ஈட்டினார்கள்.

பள்ளிப்படிப்பை பிரெய்லி முறையில் சிறப்பாக முடித்துத் தேறிய மன்கலே, அதன்பின் புனேயில் உள்ள அமிர்தவாஹினி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிப்பு முடித்தார்.

அதன்பின் மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு எழுதிய மான்கலே. 4 முறை தேர்வு எழுதியும் தோல்வி அடைந்தார். இந்நிலையில், 5-வது முறையாக கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்று, தேசிய அளவில் 923 இடத்தை மான்கலே பெற்றுள்ளார். இவரின் கனவு இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றவேண்டும் என்பதுதான்.

இதுகுறித்து மான்கலே நிருபர்களிடம் கூறியதாவது:

எனக்கு சிறுவயது முதலே 75 சதவீதம் பார்வை இல்லை. நான் படித்தது அனைத்தும் பிரெய்லி முறையிலும், பாடங்களை காதில் கேட்டும், பிறர் சொல்லிக்கொடுப்பதை கூர்ந்து கவனித்தும் தேர்வுகளை எழுதினேன்.

என் குடும்பம் இருக்கும் ஏழ்மை நிலையில், ஒலி வடிவிலான புத்தகங்களையோ அல்லது ஸ்கீரன் ரீடர் வாங்கவும் முடியாது. கல்லூரிக் காலத்தில், நான் வானொலியில் நடக்கும் பல்வேறு விவாத நிகழ்ச்சிகள், மக்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்ப்பேன் அது தொடர்பான விவாதங்களைக் கேட்பேன். . அதுமட்டுமல்லமால் மொபைல் போனில் சிலபடங்கள், பாடங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து அதை பெரிதாக்கிப் படித்து வந்தேன்.

நான் இதுநாள்வரை என்சிஆர்இடி புத்தகங்களை புத்தகங்களைப் படிக்காததால், யுபிஎஸ்சி தேர்வு முதல்முறையாக கடினமாக இருந்தது. என்னிடம் கையால் எழுதப்பட்ட நோட்டுகளும் இல்லாத காரணத்தால், முதல் ஆண்டில் தேர்வுக்கு தயாராக கடினமாக இருந்தது.

அதன்பின் புனே நகரில் உள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் நிறுவனர் பிரவின் சவான், மனோகர் போலே ஆகியோரைச் சந்தித்து என் நிலையை விளக்கினேன். அவர்கள் எனக்கு இலவசமாக பயிற்சியும், நான் படிக்கவும் உதவி செய்தனர்.

4 முறை தேர்வு எழுதியும் என்னால் தேர்வாக முடியவில்லை. ஆனால் எனக்கு குடும்பத்தாரும், பயிற்சி ஆசிரியர்களும் தொடர்ந்து ஊக்கம் அளித்து, உற்சாகப்படுத்தினர். 5-வது முறையாக வெற்றிகரமாக தேர்வு எழுதி வெற்றி பெற்று இருக்கிறேன். என்னுடைய கனவான வெளியுறவுத்துறையில் பணியில் சேர இருக்கிறேன்.

என்படிப்புக்காக என் தாய் பெற்ற கடனை இன்னும் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறார். என்னுடைய முதல்மாத ஊதியத்தில் அந்த கடன் அனைத்தையும் திருப்பிச்செலுத்துவேன்

இவ்வாறு மான்கலே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x