Last Updated : 30 Apr, 2018 04:07 PM

 

Published : 30 Apr 2018 04:07 PM
Last Updated : 30 Apr 2018 04:07 PM

பிரச்சினைகளைப் பேசாமல், சீனாவுக்கு ‘ உல்லாச சுற்றுலா’ சென்றீர்களா மோடி?: சிவசேனா கடும் விளாசல்

சீனாவுடன் பேசித்தீர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும்போது அது குறித்து ஏதும் பேசாமல், பிரதமர் மோடி, ஏதோ உல்லாச சுற்றுலா சென்று வந்திருக்கிறார் என்று சிவசேனா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த வாரம் இரு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கைச் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். ஆனால், அது குறித்து மத்திய அரசு இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை.

பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’ வில் தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது.

எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி பிரதமர் மோடி 2 நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே சீனாவுடனான நட்பு இந்தியாவுக்கு கசந்து வருகிறது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நேருவை விமர்சனம் செய்ய மோடி தவறியதில்லை. இதையெல்லாம் பிரதமர் மோடி தீர்த்து வைக்க முயற்சிப்பார் என எதிர்பார்த்தோம்.

பிரதமர் மோடி பஞ்சசீலக் கொள்கைக்கு எதிர்ப்பாக மோடி வெளியே தன்னைக் காட்டிக்கொண்டாலும், அவரின் சிந்தனைகள் நேருவின் கொள்கைகளை நோக்கியே இருக்கிறது. நேருவைப் போலவே போர் தேவையில்லை, அமைதிதான் முக்கியம் என்ற நோக்கில் மோடி இருந்து வருகிறார்

ஜவஹர்லால் நேரு காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பஞ்சசீல கொள்கையில் ஆர்எஸ்எஸ்.அமைப்பும், பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடியும் என்ன மாதிரியான நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.

சீன அதிபருடன் டீ குடிப்பதற்காகப் பிரதமர் மோடி சீனா சென்றாரா, அல்லது அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய விஷயங்களை தீர்ப்பது குறித்துப் பேசாமல் வந்துவிட்டாரா என்பது தெரியவில்லை.

டோக்லாம் பிரச்சினை, சீனா, பாகிஸ்தான் பொருளாதார பாதை உருவாக்குதல் சிக்கல் உள்ளிட்ட பல விஷயங்கள் இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அது குறித்து பிரதமர் மோடி சீன அதிபருடன் என்ன விதமான ஆலோசனைகள் நடத்தினார் என்பதும் தெரியவில்லை. அப்படியென்றால் சீனாவுக்கு பிரதமர் மோடி உல்லாச சுற்றுலாச் சென்றாரா.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை பரப்புவதற்குச் சீனா தொடர்ந்து உதவி வருகிறது அனைவருக்கும் தெரியும். பாகிஸ்தானுக்குப் பொருளாதார, அரசியல்ரீதியான, ஆயுதங்கள் ரீதியாக உதவிகள் செய்கிறது. சீனாவின் தார்மீக ஆதரவு இருப்பதால்தான் பாகிஸ்தான் நமக்குத் தொடர்ந்து இடையூறுகள் செய்து வருகின்றன.

தீவிரவாத்துக்கு எதிராக மென்மையான போக்கை பாகிஸ்தான் கடைபிடிப்பதால், உலகச் சமூகமே அந்த நாட்டை ஒதுக்கி வைத்து இருக்கிறது. ஆனால், சீனா தொடர்ந்து அந்த நாட்டுக்கு உதவிகளை அளித்து இந்தியாவுக்குத் தொந்தரவுகளை அளிக்கக் கட்டளையிடுகிறது. பாகிஸ்தானில் மெல்ல மெல்லச் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.

ஒருநேரத்தில் உலகிலேயே ஒரே ஒரு இந்து நாடாக நேபாளம் இருந்து வந்தது, அந்த நாட்டின் பெரும்பகுதியும் சீனாவின் ஆக்கிமிப்புக்குள் சென்றுவிட்டது. சீனாவின் நட்பால் நேபாளம் இந்தியாவை எதிரியாக பார்க்கத் தொடங்கிவிட்டது.

அதுமட்டுமல்லாமல், மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளிலும் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. பூட்டானின் எல்லையான டோக்லாமில் படைகளைக் குவித்து இந்தியாவுக்குத் தலைவலியை சீனா கொடுத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதியிலும் கட்டுமானங்களை எழுப்பி, சீன வீரர்கள் ஊடுறுவ முயற்சித்து வருகிறார்கள். இதுபோன்ற எந்த விஷயங்களையும் மோடி, தனது சந்திப்பின்போது, சீன அதிபருடன் பேசவில்லை.

சீனா,பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தை மன்மோகன் சிங் அரசு கூட எதிர்த்தது. ஆனால், மோடி தலைமையிலான அரசு அமைதியாக இருந்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எந்த விஷயங்களையும் இரு தலைவர்களும் ஆலோசிக்கவில்லை. பின் எதற்காகப் பிரதமர் மோடி சீனா சென்றார்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x