Published : 30 Apr 2018 04:09 PM
Last Updated : 30 Apr 2018 04:09 PM

உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி போட்டியின்றி வெற்றி - ‘‘அடைகாக்காமல் குஞ்சி பொறித்தது எப்படி?’’ என எதிர்கட்சிகள் கேள்வி

மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆச்சரிய வெற்றியை ஜனநாயக படுகொலை என அம்மாநில எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மேற்குவங்கத்தில் வரும் மே 1, 3, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 9 -ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மேற்குவங்க தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள் பாஜக வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க மறுக்கின்றனர், பாஜகவினரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தடுக்கின்றனர் எனக் கூறி பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்ற புகாரையடுத்து ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், பெரும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து தேர்தல் தேதியை மாற்ற கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆளும் கட்சியினர் கடும் வன்முறையில் ஈடுபட்டதால் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் மையத்திற்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சமூகவலைதளமான ‘வாட்ஸ் -ஆப்’ மூலம் வேட்புமனுக்களை எதிர்கட்சி வேட்பாளர்கள் அனுப்பி வைத்தனர். மே 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு கடந்த சனிக்கிழமை கடைசி நாளாகும். மொத்தமுள்ள 58,692 உள்ளாட்சி இடங்களில், 20,000க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியின்றி ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான இடங்களில் ஒரு கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது இதுவே ஆகும்.

பெரும்பாலன இடங்களில் எதிர்கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. வேறு சில இடங்களில் எதிர்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இன்னும் சில இடங்களில் சரியான முறையில் வேட்புமனு பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி தேர்தல் அதிகாரிகள், எதிர்கட்சியினரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்து விட்டனர்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:

‘‘ஆளும் கட்சி ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமையை ஆளும் கட்சி பறித்துள்ளது. முட்டை அடைகாக்காமலேய குஞ்சி பொறித்து விட்டதே. இதுபோன்ற ஆச்சரியம்தான் மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலிலும் நடந்துள்ளது. ஆளும் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இதுபோன்ற வெற்றியை ஈட்டியுள்ளது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’’ எனக்கூறினார்.

ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் மொத்தம் 72 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களில் 10 ஆயிரம் பேர் கடைசி நாளில் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். பாஜக சார்பில் 35 ஆயிரம் பேரும், இடதுசாரி கட்சிகள் சார்பில் 22 ஆயிரம் பேரும், காங்கிரஸ் சார்பில் 10 ஆயிரம் பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இடதுசாரி கட்சிகள் மொத்தம் 11 சதவீத இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அதன் பிறகு தற்போது அதிகஅளவில் திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை திரிணமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தையரியம் இல்லாத எதிர்கட்சிகள் அரசு மீது புகார் கூறுவது நகைப்புக்குரியது என அம்மாநில அமைச்சர் சோவன் சாட்டர்ஜி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x