Published : 30 Apr 2018 03:16 PM
Last Updated : 30 Apr 2018 03:16 PM

தொடர் சர்ச்சைக் கருத்துக்கள்: திரிபுரா முதல்வருக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு

திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிவரும் நிலையில், அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் படி பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றிவிட்டு முதல்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு, முதல்வரா பாஜகவைச் சேர்ந்த பிப்லப் தேவ் இருந்து வருகிறார். முதல்வராக இருக்கும் பிப்லப் தேவ் கடந்த இரு வாரங்களாகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளாகி, விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

இதற்கிடையே மாகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதுதொடர்பான நிகழ்ச்சிகள் குறித்து பேசுவதற்காக அனைத்து முதல்வர்கள் மாநாட்டைப் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் பங்கேற்கிறார். இந்த கூட்டம் முடிந்தபின், பிரதமர் மோடி, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ்வுடன் தனிப்பட்ட முறையில் சந்திக்க உத்தரவிட்டுள்ளார்.

48வயதான முதல்வர் பிப்லப் தேவ் கடந்த இரு வாரங்களாகப் பேசும் பேச்சுக்கள் பெரும் விமர்சனத்துக்கும், நகைப்புக்கும் உள்ளாகின்றன.

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று பேசியது, ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன் ஆகியோரின் அழகை வர்ணித்து யாருக்கு, அழகிப்பட்டம் கொடுத்திருக்கலாம் என்று அவர் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.

அதுமட்டுமல்லாமல் சிவில் இஞ்சினயரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதத் தகுதியானவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்கள் அல்ல என்று பேசியதும், இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல், வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம், அல்லது மாடு மேய்க்கலாம் என்று தெரிவித்தார்.

இவரின் பேச்சு அனைத்தும், பொதுமக்கள் மத்தியில் அவரின் தரத்தையும், பாஜகவின் மதிப்பையும் சீர்குலைத்து வருகிறது. இந்தப் பேச்சுக்கள் குறித்து பிரதமர் மோடி, கடுமையாக பிப்லப்பிடம் கண்டனத்தைத் தெரிவிப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான பாஜக முதல்வர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திரிபுரா முதல்வருக்குக் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், திரிபுரா முதல்வர் பிப்லப் ஏறகெனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி கட்சியையும், அவரையும் சிக்கலில் வைத்து இருக்கிறார். இதில் கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய அழைத்து அவர் எதையாவது பேசிவிட்டால், அது கட்சிக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் ஆதலால், அவரைக் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை.

பிரதமர் மோடியும் , பிப்லப்பை தனிப்பட்ட முறையில் பார்க்க உத்தரவிட்டுள்ளார். அவரின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x