Published : 30 Apr 2018 12:11 PM
Last Updated : 30 Apr 2018 12:11 PM

‘‘என் கதை முடிந்துவிட்டது என்று நான் நினைத்தேன்’’ - விபத்தில் சிக்க இருந்த விமான பயணம் குறித்து ராகுல் விளக்கம்

நடுவானில் விமானம் விபத்தில் சிக்க இருந்த நிகழ்வு, அனுபவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்துக்காகக் கடந்த வியாழக்கிழமை மாலை பால்கான்-2000 என்ற விமானத்தில் டெல்லியில் இருந்து ஹூப்ளி நகருக்கு ராகுல் காந்தி, அவரின் உதவியாளர் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.

ஆனால், விமானம் நடுவானில் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இரு முறை குலுங்கி, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி வந்தது. அதன்பின், மீண்டும் கட்டுக்குள்கொண்டுவரப்பட்டு, 3 முயற்சிகளுக்குப் பின், விமானம் ஹூப்ளியில் தரையிறக்கப்பட்டது.

அதன்பின் இந்த விமானத்தில் ஏதேனும் கோளாறுகள் இருந்ததா, அல்லது சதிச்செயலா என்பது குறித்து விசாரணை நடத்தக் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபியிடம் காங்கிரஸ் கட்சி சார்பிலும், ராகுல் காந்தியின் சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்தச்சம்பவத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று நடந்த ஜன் ஆக்ரோஷ் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

‘‘கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் டெல்லியில் இருந்து,ஹூப்ளிக்கு தனி விமானத்தில் கடந்த வியாழக்கிழமை வந்தேன். விமானம் நடுவானில் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானம் குலுங்கி, கீழ் நோக்கி இறங்கி. அப்போதே என்கதை முடிந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால், என் மனதில் திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. மானசரோவரில் உள்ள கைலாஷ்மலைக்குப் போய் தரிசனம் செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டேன். கர்நாடகத் தேர்தல் முடிந்தபின் 10 முதல் 15நாட்களுக்குப் பின் இந்தப் பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

அதன்பின் விமானம் கட்டுக்குள் வந்து, 3 முறை முயற்சிக்குப் பின், ஹூப்ளியில் விமானம் தரையிறக்கப்பட்டது. கர்நாடகத் தேர்தல் முடிந்தபின் ஜூன் அல்லது செப்டம்பர் மாதங்களில் கைலாஷ்மலைக்குச் செல்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x