Published : 30 Apr 2018 09:07 AM
Last Updated : 30 Apr 2018 09:07 AM

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆசிர்வாதத்தால் நான் மன்னன் ஆவேன்: மஜத மாநில தலைவர் குமாரசாமி நம்பிக்கை

‘‘கர்நாடக தேர்தலுக்குப் பிறகு மன்னரை உருவாக்குபவனாக இருக்க மாட்டேன். மக்கள் ஆசிர்வாதத்துடன் மன்னன் ஆக்கப்படுவேன்’’ என்று மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ‘‘இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதனால் தொங்கு சட்டப்பேரவை அமையும். ஆனால், புதிய ஆட்சி அமைக்க மஜத முக்கிய பங்காற்றும். அடுத்த ‘கிங் மேக்கராக’ குமாரசாமி இருப்பார்’’ என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இந்நிலையில் மஜத மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ‘கிங் மேக்கராக’ இருக்க மாட்டேன். கர்நாடக மக்களின் ஆசிர்வாதத்துடன் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ‘கிங்’ ஆவேன். இந்தத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் துளி கூட சந்தேகம் இல்லை. மாநிலம் முழுவதும் மஜத.வுக்கு ஆதரவாக அலை வீசுகிறது. பாஜக, காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டடனர்.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சிகளை மக்கள் பார்த்துவிட்டனர். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துவிட்டனர். அந்த அனுபவம் மக்களுக்கு உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில், உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், சிறந்த நிர்வாகத்தை வழங்கவும் மஜத.வுக்கு ஒரு முறை வாய்ப்பளியுங்கள் என்று கர்நாடக மக்களிடம் கேட்கிறேன். இதே கருத்துடன்தான் மக்களை சந்திக்கிறேன்.

மக்களின் ஆசிர்வாதத்துடன் முழு பலத்துடன் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் என்னுடைய இலக்கு 113. அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறேன். இந்த இலக்கை கடைசியில் நான் தொட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன்.

தற்போதுள்ள நிலவரப்படி 97 தொகுதிகளில் இருந்து 105 தொகுதிகள் வரை மஜத கைப்பற்றும். 7-8 இடங்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று நினைக்கிறேன். அவற்றையும் பெறுவதற்கு முழு மூச்சாகப் பணியாற்றி வருகிறேன். அதனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையில் மஜத.வுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்று நம்புகிறேன்.

அதேபோல் தொங்கு சட்டப்பேரவை ஏற்படாது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வைத்து இப்போதைக்கு எந்தத் தெளிவும் கிடைக்காது. தேர்தலுக்குப் பிறகு ஒரு தெளிவு கிடைக்கும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்தத் தேர்தல் மஜத கட்சிக்கு வாழ்வா, சாவா போராட்டம் என்று கருதப்படுவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு குமாரசாமி பதில் அளிக்கையில், ‘‘ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆட்சியில் இல்லாவிட்டாலும், எங்கள் கட்சி தொண்டர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த முறை இலக்கை அடைந்துவிட வேண்டும் என்று அவர்கள் துடிப்புடன் செயலாற்றி வருகின்றனர். ஆட்சிக்கு வரவேண்டும் என்று நானும் கடினமாக உழைத்து வருகிறேன். சுயநலத்துக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸால் பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுவிட்டன. அவற்றை சரிசெய்ய வேண்டும். அதற்கு கர்நாடக மாநிலத்தில் சிறந்த நிர்வாகம் கட்டாயமாகத் தேவைப்படுகிறது’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x