Published : 30 Apr 2018 08:56 AM
Last Updated : 30 Apr 2018 08:56 AM

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும்: வானொலி உரையில் பிரதமர் மோடி அறிவுரை

தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வரிசையில் நேற்று ஒலிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை வென்றனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கடந்த ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இந்தியர்கள் அனைவரும் உடல் திறனுடன் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். இதுதொடர்பாக நீச்சல், நடைபயிற்சி, மலையேற்றம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வோர் புகைப்படங்களுடன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். உடல் வலிமைக்கு யோகா மிகவும் அவசியம். நீங்கள் மட்டுமல்ல, உங்களை சுற்றியுள்ள அனைவருக்கும் யோகாவை கற்றுக் கொடுங்கள்.

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, மழைநீரை சேமிப்பது சமுதாயத்தின் கடமை. ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும். இதற்காக நமது முன்னோர் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். அந்த வகையில் குஜராத், ராஜஸ்தானில் பழங்கால படிக்கிணறுகள் ஏராளம் உள்ளன.

தமிழக கல்வெட்டு

தமிழக கோயில்களின் கல்வெட்டுகளில் மழைநீரை சேமிப்பது தொடர்பாகவும் வறட்சியை சமாளிப்பது தொடர்பாகவும் பயனுள்ள தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மன்னார்கோவில், சேரன்மகாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களின் கோயில்களில் இத்தகைய கல்வெட்டுகள் உள்ளன.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் தண்ணீர் சேமிப்பு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.32,000 கோடி அளவுக்கு செலவிடப்படுகிறது. தண்ணீர் சேமிப்பினால் கடந்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 1.5 கோடி ஹெக்டேர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

உத்தராகண்ட் மாநில விவசாயிகள் நாட்டுக்கே வழிகாட்டியுள்ளனர். அங்கு சோளம், பார்லி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை அப்படியே விற்பனை செய்யாமல் தற்போது பிஸ்கெட்டுகள் உற்பத்தியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். தங்கள் விளைபொருட்களை கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்து வந்த விவசாயிகள், தற்போது ஒரு கிலோ பிஸ்கெட்டை ரூ.50-க்கு விற்கின்றனர். இதற்காக அந்த மாநில விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களையும் தொடங்கியுள்ளனர். இந்த வழிமுறையை இதர விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்.

தூய்மை இந்தியா

கோடை விடுமுறை காலத்தில் மாணவ, மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்காக ‘தூய்மை இந்தியா கோடை கால திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இதில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவில் விருது, பரிசுகள் வழங்கப்படும்.

ரம்ஜான் மாதம் நெருங்கும் வேளையில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜான் நோன்பு மூலம் மற்றவர்களின் பசி, தாகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நேரத்தில் நபிகள் நாயகத்தை நினைவுகூர்ந்து அவர் காட்டிய அமைதி, சகோதரத்துவத்தைப் பின்பற்ற வேண்டும்.

ஆன்மிக சுற்றுலா

புத்த பூர்ணிமா, ஒவ்வொரு இந்தியருக்கும் முக்கியமான நாள். புத்தர் பிறந்த பூமி இந்தியா என்பதில் அனைவரும் பெருமை கொள்கிறோம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் புத்தரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். புத்தரின் போதனைகள் தனக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்ததாக பாபா சாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மரில் பவுத்த மதம் பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள பவுத்த புனித தலங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் புத்த பூர்ணிமாவை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 1998 மே 11-ம் தேதி புத்த பூர்ணிமா அன்று பொக்ரானில் அணு சோதனை நடைபெற்றது. இப்போது அதன் 20-வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளோம்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x