Published : 09 Apr 2018 08:21 AM
Last Updated : 09 Apr 2018 08:21 AM

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை: ஆதரவு தரும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரே குற்றச்சாட்டு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சியின் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டி உள்ளார்.

உ.பி.யில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வரானார். இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு (எஸ்பிஎஸ்பி) 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதன் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சராக உள்ளார்.

எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்றவர்களில் ஒருவரை முதல்வராக்காமல் எம்பியாக இருந்த யோகியை முதல்வராக்கியதற்கு அப்போதே ராஜ்பர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. உ.பி.யில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் ராஜ்பர் சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த 2 தலித் எம்.பி.க்கள் பங்கேற்றனர். மற்றொரு தலித் எம்.பி, யோகி ஆதித்யநாத் மீது குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதுபோல பாஜக எம்எல்ஏ.க்கள் சிலரும் யோகி அரசு மீது கோபத்தில் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன?

அமைச்சரவை கூட்டத்தில் அனைவரது கருத்துகளும் கேட்கப்படுகின்றன. ஆனால், 4 அல்லது 5 நபர்கள்தான் இறுதி முடிவு எடுக்கின்றனர். இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து புகார் செய்தேன்.

இதுகுறித்து விரிவாக பேச அவர் 10-ம் தேதி இங்கு வருவதாக உறுதி அளித்துள்ளார். அப்போது நாங்கள் எழுப்பும் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் கூட்டணியில் நீடிப்பது குறித்து மறு பரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x