Last Updated : 06 Apr, 2018 08:48 PM

 

Published : 06 Apr 2018 08:48 PM
Last Updated : 06 Apr 2018 08:48 PM

‘இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு

இப்போது நான் நினைத்தால் கூட பிரதமராக முடியும். ஆனால், அது எனக்குத் தேவையில்லை. அவ்வாறு ஆக வேண்டும் என்று எண்ணியதும் இல்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவு பெற்ற பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், மக்களின் வரவேற்பையும் பெற்றது. பற்பசை முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவா தலைநகர் பானாஜி நகரில் 3 நாள் கோவா திருவிழா நிகழ்ச்சிகளில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். மக்கள் ஆரோக்கியமாக எப்படி வாழ வேண்டும், சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து பேசிய ராம்தேவ், மேடையில் யோகா செய்து காண்பித்தார்.

அதன்பின் அவர் பேசியதாவது:

''பதஞ்சலி நிறுவனம் என்பது ஆச்சார்யா பாலகிருஷ்ணா என்பவரால் தொடங்கப்பட்டது. லாப நோக்கமில்லாமல் தொடங்கப்பட்ட அறக்கட்டளையாக பதஞ்சலி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல.

நமது நாட்டைக் கொள்ளயடித்த, கிழக்கிந்திய நிறுவனம் போல், நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பது சிறுவயது ஆசையாகும். இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து நாட்டைக் காக்கவேண்டும் என்று எண்ணினேன்.

நான் இந்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை சுகாதாரம், மருத்துவமனை, கல்வி, ஏழைமக்கள் நலன் ஆகியவற்றுக்காக செலவு செய்கிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார். நான் எந்தத் தவறும் நான் செய்யவில்லை.

நான் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறேன் என்பதால், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது என்று எண்ண வேண்டாம் அதுபோன்று ஏதும் இல்லை. இப்போது நான் நினைத்தால்கூட, பிரதமராகவோ, முதல்வராக, ஒரு எம்.பி.யாகவோ ஆக முடியும்.

ஆனால், ஒருபோதும் நான் எதற்கு ஆசைப்பட்டதும் இல்லை, அவ்வாறு ஆக வேண்டும் என எண்ணியதும் இல்லை. எனக்கு பிரதமராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ ஆகும் விருப்பம் இல்லை.''

இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x