Last Updated : 06 Apr, 2018 06:00 PM

 

Published : 06 Apr 2018 06:00 PM
Last Updated : 06 Apr 2018 06:00 PM

காங்கிரஸ் செயலுக்கு கண்டனம்: 12-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் உண்ணாவிரதம் - பிரதமர் மோடி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரம் தாழ்ந்த நடவடிக்கையை கண்டித்து, வரும் 12-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் அமளி, கூச்சல் குழப்பம் காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு வீணாகிப்போனது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் நிறுவன நாள் நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள அந்த கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. அப்போது எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்த அமளி, கூச்சல் குழப்பம் ஆகியவற்றால் அவை முடங்கியது குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசியது குறித்து மத்திய அமைச்சர் அனந்த குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

‘‘நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் பலம் அதிகரித்தவுடன், குறிப்பாக காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் மற்றும் எதிர்மறை அரசியலை நடத்துகிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் செய்த தரம் தாழ்ந்த செயலால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து காங்கிரஸ் செயல்பட்டுள்ளது என மோடி வேதனை தெரிவித்தார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேசினார். அப்போது அவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டனர். எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடக் காரணம் என்ன? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் எம்.பி.க்களின் தரம்தாழ்ந்த செயலால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் மிகவும் மோசமாக சென்றுவிட்டது. காங்கிரஸ் எம்.பி.க்களின் செயலைக் கண்டித்து, வரும் 12-ம் தேதி அனைத்து பாஜக எம்.பி.க்களும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளின்போது, அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏழை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்’’

இவ்வாறு அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x