Last Updated : 06 Apr, 2018 04:17 PM

 

Published : 06 Apr 2018 04:17 PM
Last Updated : 06 Apr 2018 04:17 PM

மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை குறைத்துவிடாதீர்கள்: எம்.பி.க்களிடம் வெங்கய்யா நாயுடு வேதனை

எம்.பி.க்களின் அமளியாலும், போராட்டத்தாலும் நான்கில் 3 பகுதி நேரம் வீணாகிவிட்டது. மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் செயல்படாதீர்கள் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுக்கக் கோரி காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையின் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்றுடன் நிறைவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவை நடவடிக்கைகள் குறித்து வேதனையுடன் பேசினார்.

அவர் பேசியதாவது:

''பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் 44 மணி நேரம் மட்டுமே அவை ஒழுங்காக செயல்பட்டுள்ளது. 121 மணிநேரம் எம்.பி.க்கள் அமளி, குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.

எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட 419 கேள்விகளுக்கு, 5 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தில் கடந்த 27 நாட்களில் ஒரு முறை கூட கேள்விநேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய அவையில் இந்த அமர்வில் எம்.பி.க்கள் அமளியில் முக்கியத்துவம் இழந்துள்ளது. மிகுந்த பொறுப்புள்ளவர்கள், சிறந்த வல்லுநர்கள், திறன்படைத்தவர்கள் கொண்டிருக்கும் இந்த அவையில் பல்வேறு முக்கியத்துவம் சார்ந்த விஷயங்களை விவாதிக்க முடியாமல் போய்விட்டது வேதனை அளிக்கிறது.

எம்.பி.க்களின் இதுபோன்ற செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய இடத்தை முக்கியத்துவம் இல்லா இடமாக மாற்றிவிடக்கூடாது.

இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி, கூச்சல் குழப்பத்தால், அனைவரும் பொன்னான நேரத்தை இழந்துவிட்டோம். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் அரசு, இந்த மக்கள், அரசு ஆகிய அனைத்தும் நேரத்தை இழந்துவிட்டன.''

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x