Published : 06 Apr 2018 08:25 AM
Last Updated : 06 Apr 2018 08:25 AM

காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்: நாடாளுமன்ற முடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க கோரிக்கை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி வருவது உட்பட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்களும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில எம்.பி.க்களும் பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் எவ்வித அலுவலும் நடைபெறாமல் முடங்கி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவது, ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்காதது, தலித்களுக்கு எதிரான அடக்குமுறை, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 17 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி நிலவுவதால் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியவில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் நாடாளுமன்ற செயல்பாட்டை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி உள்ளது” என்றார்.

நாடாளுமன்றம் செயல்படாத 23 நாட்களுக்கான சம்பளத்தை பெற மாட்டோம் என ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x