Published : 06 Apr 2018 08:08 AM
Last Updated : 06 Apr 2018 08:08 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: அதிமுக அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் 21-வது நாளாக முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. ஆனால், பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதன் காரணமாக, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. மேலும் இந்த அமளியால், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அலுவல் நிரல்கள் எடுத்து வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ‘தமிழகத்துக்கு நீதி வேண்டும்’, ‘தமிழக மக்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அதிமுகவினர் கோஷமிட்டனர். அவர்களை இருக்கைகளுக்குச் செல்லும்படி சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர், 12 மணிக்கு அவை கூடியபோதும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் அமளி நீடித்ததன் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மாநிலங்களவையிலும் அதிமுக, தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x