Published : 20 Mar 2018 06:31 PM
Last Updated : 20 Mar 2018 06:31 PM

‘‘அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்’’ - அடுத்த பிரச்சாரத்தை கையில் எடுத்தது ‘பீட்டா’

 

பூமியில் நச்சு ஏற்படுத்தும் வாயுக்கள் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்துவதால், இறைச்சி கூடங்களை மூட வேண்டும், அசைவம் சாப்பிடுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என ‘பீட்டா’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச வன தினம் நாளை கடை பிடிக்கப்படுவதையொட்டி, விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ சார்பில் டெல்லியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் பீட்டா அமைப்பின் உறுப்பினர்கள் விலங்குகள் போல வேடமிட்டு, கலந்து கொண்டனர். மேலும், விலங்குகளை கொல்லக்கூடாது, வனத்தை அழிக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, பீட்டா இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆயுஷ் சர்மா கூறியதாவது:

‘‘காடுகளை நாம் அழித்து வருவதால் தாவரங்களை உணவாக கொண்ட விலங்கினங்கள் அழிகின்றன. அந்த விலங்குகளை உணவாக கொண்ட புலி போன்ற விலங்கினங்கள் அழிகின்றன. உணவு சங்கிலி அறுந்து போகிறது. இதனால் பூமியில் வெப்பநிலை உயர்வது போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே வனத்தை காப்பாற்ற வேண்டும்.

அனைவரும் சைவ உணவிற்கு மாறுவதால், புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும் என சமீபத்திய அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் சைவ உணவுக்கு மாறுவதால் விலங்குகளையும், பூமியையும் காப்பாற்ற முடியும். உடல் நலத்தையும் பேண முடியும். எனவே அனைவரும் சைவ உணவுக்கு மாற வேண்டும்.

இறைச்சி கூடங்கள், கோழிப்பண்ணைகளால் 51 சதவீத அளவிற்கு கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் அதிகம் உருவாகின்றன. இதுபோன்ற வாயுக்களால் பசுமை குறைந்து, தாவரங்கள் அழிந்து பூமி வெப்பமயமாகிறது. இதனால் மனித குலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அனைவரும் சைவ உணவிற்கு மாற வேண்டும். அத்துடன் இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும்’’ எனக்கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக ‘பீட்டா’ அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக ‘பீட்டா’ அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் வெகுண்டு எழுந்து போராடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x