Last Updated : 20 Mar, 2018 04:31 PM

 

Published : 20 Mar 2018 04:31 PM
Last Updated : 20 Mar 2018 04:31 PM

ஐயா,பார்த்து பண்ணுங்கய்யா- விடைத்தாளில் ரூபாயை இணைத்து அனுப்பிய உ.பி.மாணவர்கள்

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாளில் பணத்தை வைத்து இணைத்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் என்றாலே பள்ளித் தேர்வுகளில் அடிக்கடி மாணவர்கள் பிட் அடித்து பிடிபடுவதும், மாணவர்களுக்கு பிட்களை பெற்றோர்களே கொடுப்பதும் போன்ற செய்திகளை அறிந்திருப்போம். ஆனால், இப்போது, விடைத்தாளில் பணத்தை வைத்து அதைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு கையூட்டு வழங்கும் கதையும் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரோசாபாத் மாவட்டத்தில் ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலையில் கேள்வித்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, மாணவர்கள் தங்களின் விடைத்தாளில் ரூ.100, ரூ.50, ரூ.500 நோட்டுகளை இணைத்து தங்களை தேர்வில் பாஸ் செய்யக் கோரியுள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள், இதுபோன்று விடைத்தாளில் பணத்தை இணைத்து அனுப்புகிறார்கள். தங்களின் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படியாவது பாஸ்செய்யக்கோருகின்றனர்.

ஆனால், ஆசிரியர்களைப் பொறுத்தவரை விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கிறோம், பணத்துக்காக அல்ல'' என்று தெரிவித்தார்.

தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் இதுபோன்று செய்துள்ளார்கள். சிலநேரங்களில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமிரா பழுதடைந்ததால் இதுபோல் நடந்திருக்கலாம் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இயற்பியல் ஆசிரியர் சம்பா சக்ரவர்த்தி கூறுகையில், ''நான் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்தபோது, அதில் 100 ரூபாய் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த கேள்வித்தாள் மாணவருடையதா அல்லது மாணவி எழுதியதா எனத் தெரியவில்லை. ஆனால், இறுதியில் மாணவி ஒருவர் எழுதியது என்பது தெரியவந்தது.

அந்த விடைத்தாளில் தயவுசெய்து என்னை பாஸ் செய்துவிடுங்கள், இல்லாவிட்டால் எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மற்றொரு மாணவர் என்னை நீங்கள் பாஸ் செய்யாவிட்டால், என்னுடைய பெற்றோர்கள் எனது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என தெரிவித்து பணம் வைத்திருந்தார். மாணவர்களைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பணத்துக்காக மயங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x