Last Updated : 20 Mar, 2018 03:40 PM

 

Published : 20 Mar 2018 03:40 PM
Last Updated : 20 Mar 2018 03:40 PM

உடல் தானம் செய்ய இஸ்லாத்தில் இடமில்லை: கான்பூர் முஸ்லிம் அதிகாரிக்கு எதிராக ஃபத்வா

முஸ்லிம்கள் இறந்த பின் தம் உடலை தானமாக்க இஸ்லாத்தில் இடமில்லை என உ.பி.யில் ஃபத்வா அளிக்கப்பட்டுள்ளது. இதை, அந்நகர புகழ்பெற்ற மதரஸாவான எஹசானுல் மதரஸாவின் முப்தி அளித்துள்ளார்.

உ.பி.யின் கான்பூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றுபவர் டாக்டர் அர்ஷத் மன்சூரி. இவர் கான்பூரிலுள்ள ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் ஆய்விற்காக தம் உடலை இறந்தபின் தானமாக்க முன் வந்தார். இதற்காக அவர், தம் மாணவர்கள் சிலருடன் இணைந்து கடந்த 2006-ல் இறந்தபின் தம் உடல்களை தானமாக்க உறுதிமொழி பூண்டதுடன் உறுதிமொழிப் பத்திரத்திலும் கையெழுத்திட்டு ஒப்படைத்துள்ளனர். இதை அறிந்த கான்பூரின் சில முஸ்லிம்கள் அதன் மீதான ஷரீயத் சொல்வது குறித்து அறிய விரும்பினர். இதற்காக, கான்பூரின் எஹசானுல் மதாரீஸ் மதரஸாவின் முப்தியான சையது அஸ்வர் உசைனை அணுகினர்.

அவர் தம் அளித்த ஃபத்வாவில், ''இறந்தபின் உடலை தானமாக்க இஸ்லாம் அனுமதிப்பதில்லை. நமக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் பொருள்களை மட்டுமே தானமாக அளிக்க முடியும். ஆனால், நமது உடல் என்பது இறந்த பிறகும் அது அல்லாவிற்கு சொந்தமானது. அதை உயிர் பிரிந்தபின் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது அவசியம் ஆகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முப்தி அஸ்வரின் ஃபத்வாவை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டி உ.பி.யின் தியோபந்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதரசாவான தாரூல் உலூமின் முப்தியிடமும் அது கேட்கப்பட்டது. இதற்கு அளித்த ஃபத்வாவில் முப்தி ஹனீப் பர்கத்தி கூறுகையில், ''உடலை தானமாக்க இஸ்லாத்தில் இடமில்லை. அப்படிச் செய்வது அல்லாவின் விருப்பத்திற்கு எதிரானது. ஷரீயத்தின் இந்த உத்தரவில் எவரும் தலையிட முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 'தி இந்து'விடம் உடலைத் தானமாக்க முன் வந்துள்ள டாக்டர் அர்ஷத் கூறும்போது, ''இறந்த பின்பும் ஒருவர் இந்த உலகிற்கு பயனாக இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறார். இதன் மீது தவறான புரிதலுடன் மதரஸாவின் முப்திக்கள் மக்களை திசை திருப்புகின்றனர். எனவே, எனது முடிவில் மாற்றம் இருக்காது. இதற்காக எனக்கு பலரும் போன் செய்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது கான்பூர் நகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

சமீபகாலமாக மதரஸாக்களின் முப்திக்கள் அளிக்கும் ஃபத்வா சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன் வட்டியின் அடிப்படையிலான வங்கிகளில் முஸ்லிம்கள் பணியாற்றக் கூடாது என அளித்த ஃபத்வாவும் சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x