Last Updated : 20 Mar, 2018 03:15 PM

 

Published : 20 Mar 2018 03:15 PM
Last Updated : 20 Mar 2018 03:15 PM

கிருஷ்ண பக்தை மீரா குறித்து தவறான சித்தரிப்பு: அறிவிக்கப்பட்ட இலக்கிய விருது திடீர் ரத்து; சர்ச்சையால் உதயப்பூர் விழாவும் நிறுத்தம்

கிருஷ்ண பக்தையும் ராணா பிரதாப் சிங் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பக்திக் கவிஞருமான மீரா பாயை தவறாக சித்தரித்ததாகக் கூறி அறிவிக்கப்பட்ட இலக்கிய விருது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உதயப்பூரில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து விழாவும் நிறுத்தப்பட்டது.

ராஜஸ்தானின் எழுத்தாளர் ஹர்தன் ஹர்ஷுக்கு இந்த ஆண்டின் ராஜஸ்தான் சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அகாடெமியின் 'ரங்கே ராகவ் ஆண்டு விருது'க்காக அவர் எழுதிய ''வரலாற்று மீரா'' என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இவ்விருதை வழங்குவதற்காக நேற்று விருது வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கல்வியாளர்கள் குழு ஒன்று இந்நூலுக்கு விருது வழங்கக்கூடாது எனக் கூறி திடீரென போர்க்கொடி உயர்த்தியது. மீரா பாயையும் மேவார் ஆட்சியையும் இந்நூல் மிகவும் தவறாக சித்தரித்துள்ளதாக அவர்கள் கூறினர். இதனால் சர்ச்சை எழுப்பியுள்ளதன் அடிப்படையில், ஹர்தன் ஹர்ஷ்ஷூக்கு வழங்கப்பட்ட ராஜஸ்தான் சாகித்ய அகாடெமி (ஆர்எஸ்ஏ) விருது ரத்து செய்யப்பட்டதாக அகாடெமியின் தலைவர் இந்து சேகர் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வரலாற்று ஆசிரியர் ராகவேந்திரா மனோகர் தெரிவிக்கையில், மீரா பாய் உயர்ந்த குணங்களும் லட்சியமும் கொண்டவர். அவருடைய பாத்திரத்தையே படுகொலை செய்வது என்பது கற்பனைகூட செய்து பார்க்கமுடியாதது. தேவையான ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர், உண்மையின் அடிப்படையில் எழுதப்படும்போதுதான் எழுத்து நன்றாக அமையும். எந்தவிதமான ஆதாரக் குறிப்புகளையும் பின்பற்றாமல் கற்பனையில் சித்தரித்து எழுதுவது நல்லதல்ல என்றார்.

இருப்பினும் இது குறித்து ஹர்ஷ் கூறுகையில், ''இலக்கியம் என்பது வெறும் வரலாறு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கர்னல் டாட்ஸ் புத்தகத்தில் கிடைத்த குறிப்புகளின் அடிப்படையில்தான் நான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்'' என்றார்.

விருது விழா திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து, ராஜஸ்தான் சாகித்ய அகாடெமியின் தலைவர் இந்து சேகர் தெரிவித்ததாவது:

எமது மக்கள் மீரா பாய்க்கும் மேவார் அரசின் மன்னன் மகாராணாவுக்கும் கிடைத்துள்ள புகழ் குறித்து மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். மீராபாயைக் குறித்து எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை அனைத்துமே ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல. மேலும் விழாவை ரத்து செய்வது குறித்து ஒரு அவசரக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அகாடெமி தலைவர் தெரிவித்தார்.

உதயப்பூரில் சில தீவிரவாதக் குழுக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் விருது வழங்கும் விழா நிகழ்வு பேனர்களைக் கிழத்து கீழே தள்ளியுள்ளனர். அதுமட்டுமின்றி ஆர்எஸ்ஏ அலுவலக மீரா பாய் குறித்தும் மேவார் பேரரசு குறித்தும் நாகரிகமற்ற வார்த்தைகளைக் கூறி சிப்பந்திகளை மிரட்டியுள்ளதை சகித்துக்கொள்ள முடியாது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு காவல் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றார் ஒரு போலீஸ் அதிகாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x