Last Updated : 20 Mar, 2018 12:48 PM

 

Published : 20 Mar 2018 12:48 PM
Last Updated : 20 Mar 2018 12:48 PM

39 இந்தியர்களை கடத்தி கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மத்திய அரசு உறுதி செய்தது

 

கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், ''ஈராக்கில் மொசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. அவர்கள் தீவிரவாதிகளால்கூட கொல்லப்பட்டு இருக்கலாம், ஆனால், எதையும் உறுதி செய்யாமல் இங்கு கூற முடியாது.

39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுவதில் எனக்கு என்ன ஆதாயம் இருக்கிறது. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள் என எளிதாகக் கூறமுடியும். ஆனால், எந்தவிதமான உறுதியான ஆதாரங்கள் இல்லாமல், நான் எதையும் சபையில் கூறமுடியாது. ஈராக் அரசு மூலம் காணமால் போன இந்தியர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்கள். ஒருவர் உயிரோடு இருக்கும் போது அவர் இறந்துவிட்டார் எனச் சொல்வது பாவம். அந்த பாவத்தை நான் செய்யமாட்டேன்'' எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜாபரி கூறுகையில், ''இந்தியர்கள் உயிரோடு இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது குறித்து உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.அவர் கடைசியாக பாதுஷ் சிறையில் இருந்தனர். அந்த சிறை ஐஎஸ் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தியர்களைத் தேடி வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதனால், ஐஎஸ்தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் அவர்களின் உறவினர்கள் கவலையுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் 40 இந்தியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டன. இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பினார்.

மீதம் இருந்த 39 இந்தியர்களும் பதூஷ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். பதூஷ் நகரில் அதன்பின் தேடுதல் நடத்தப்பட்டதில் அனைத்து இந்தியர்களின் உடல்களும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இனங்க ஈராக் அதிகாரிகள், இந்தியர்களின் உடலை ராடாரின் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்தனர்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்களில் நீண்ட முடியும், ஈராக் நாட்டவர்கள் அணியாத வகையில் குட்டையான ஷூக்களும், அடையாள அட்டைகளும் காணப்பட்டன. மேலும், அந்த உடல்களை மரபணு பரிசோதனை நடத்தியதில் 39 உடல்களில் 38 உடல்களின் மரபணு இந்தியர்களின் மரபணுவுடன் ஒத்துச்சென்றது.

இதையடுத்து, 39 இந்தியர்களின் உடல்களையும் கொண்டுவருவதற்காக விரைவில் இணை அமைச்சர் வி.கே. சிங் ஈராக் செல்ல உள்ளார்'' என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x