Published : 20 Mar 2018 08:39 AM
Last Updated : 20 Mar 2018 08:39 AM

சிறுமி ஆருஷி கொலை வழக்கு பெற்றோருக்கு எதிரான மனு: நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ராஜேஷ் - நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி தல்வார் (14), கடந்த 2008-ம் ஆண்டு மே 15-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்குப் பிறகு, அவர்களின் வீட்டில் வேலை செய்துவந்த ஹேம்ராஜ் (45) என்பவர் காணாமல் போனதால் அவர்தான் கொலையாளி என போலீஸார் முதலில் கருதினர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, ஹேம்ராஜின் உடலும் அவர்களின் வீட்டு மாடியில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வாரை கைது செய்தனர். ஹேம்ராஜுடன் ஆருஷி தவறான தொடர்பு வைத்திருந்ததன் காரணமாகவே, அவர்களை ராஜேஷும், நூபுர் தல்வாரும் கொலை செய்ததாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில், இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வாவரை விடுதலை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கை சிபிஐ சரிவர விசாரிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தப் பின்னணியில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ஹேம்ராஜின் மனைவி கும்கலா பஞ்சாதே என்பவரின் சார்பிலும், சிபிஐ தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x