Published : 20 Mar 2018 08:32 AM
Last Updated : 20 Mar 2018 08:32 AM

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பயப்படுவது ஏன்?அதிமுக.வை உசுப்பிவிட்டு பாஜக வேடிக்கை பார்க்கிறது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மத்திய அரசு பயப்படுவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிமுகவை உசுப்பி விட்டு பாஜக வேடிக்கை பார்க்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில பிரிவினையின்போது கொடுத்த வாக்குறுதிப்படி, மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதற்கு 11 இதர மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மக்களவையில் அதிமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்பிக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சி எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்களுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்துள்ள 19 அம்சங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியே தீர வேண்டும். அதுவரை நமது போராட்டம் ஓயாது. ஆந்திர மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இதை சந்திக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு பயப்படுவது ஏன்? இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏன் தள்ளிப்போடுகிறது?

பாஜக ஒரு கட்சியுடன் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) ரகசிய கூட்டு வைத்துக்கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகிறது. அதேநேரம் அதிமுக எம்பிக்களை அமளியில் ஈடுபட வைத்து இந்த தீர்மானத்தை தள்ளி வைக்கிறது. ஏன் இந்த நாடகம்? நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெற்றி தோல்வி முக்கியமல்ல. இதன்மூலம் எங்களது கோரிக்கை நாடு முழுவதும் தெரியவரும். அதேநேரம் பாஜவை எதிர்க்கும் இதர கட்சிகள் ஒன்று சேர வாய்ப்பு கிடைக்கும்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி விஜய் சாய் ரெட்டி, பிரதமர் அலுவலகத்திலேயே உள்ளார். இதன்மூலம் அந்தக் கட்சியின் நிலை என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பவன் கல்யாண் கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து குறித்து பேசாமல், இப்போது திடீரென பேசுவதும் தெலுங்கு தேசத்தை விமர்சிப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. இவரை பின்னாலிருந்து இயக்குவது யார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள். சிறப்பு அந்தஸ்து குறித்து ஆந்திரா முழுவதும் கிராமங்கள், நகர்ப்புறங்களில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x