Published : 20 Mar 2018 07:56 AM
Last Updated : 20 Mar 2018 07:56 AM

தினமும் விதவிதமான அலங்காரத்தில் வந்த எம்.பி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, நாடாளுமன்றத்தில் தினமும் தெலுங்கு தேசம் எம்.பி. நடத்திய ஆடை அலங்கார போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆண்டு பலவாகியும் சிறப்பு அந்தஸ்தை வழங்கவில்லை என்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு புகார் கூறினார். அத்துடன் மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து கடந்த வாரம் விலகினார்.

இதற்கிடையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் தினமும் போராட்டம் நடத்தினர். அவர்களில் எம்.பி. டாக்டர் சிவப்பிரசாத்தின் நூதனப் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திடீரென நேற்று மீசை, தாடியை நன்கு மழித்துவிட்டு மஞ்சள் நிறத்தில் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு பெண் போல வந்தார். தலையில் ‘விக்’ வைத்து அதில் பூவையும் சூடிக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்தார் சிவப்பிரசாத். கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.

முன்னதாக சாமியார், பாதிரியார், சான்டா கிளாஸ், மகாத்மா காந்தி, ராமா ராவ், மீனவர், சர்தார் வல்லபாய் படேல், கிருஷ்ணர் போல பலவிதமான ஆடைகளில் வந்து மத்திய அரசுக்கு எதிராக இவர் போராட்டம் நடத்தினார். இவருடைய நூதன போராட்டம் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பரபரப் பாக வெளியானது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தினமும் அமளி நடந்தாலும் இவருடைய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் தன்னை ஏழை குசேலன் என்றும், பிரதமர் மோடியை கடவுள் கிருஷ்ண பெருமான் என்றும் கூறி நூதன போராட்டம் நடத்தினார். அப்போது ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கிருஷ்ணரை (மோடி) பிரார்த்தனை செய்வது போல் போராட்டம் நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x