Published : 20 Mar 2018 07:55 AM
Last Updated : 20 Mar 2018 07:55 AM

சான்றிதழ், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்க இளைஞர்களை ஈர்க்கும் ‘இணையப் பெட்டகம்’

ரசு இணையதளத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் கடந்த வாரம் வந்தது. ‘இனி கர்நாடகாவில் இடையூறின்றிப் பயணிக்கலாம்’ என்கிற தலைப்புச் செய்தியுடன், 2018 பிப்ரவரி 1-ம் தேதியிட்ட, கர்நாடக அரசின் அறிவிக்கையும் இணைக்கப்பட்டு இருந்தது.

‘டிஜி-லாக்கர்’ - அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டது. இந்திய அரசு செய்து தந்துள்ள ஒரு வசதி - டிஜி-லாக்கர். தமிழில், ‘இணையப் பெட்டகம்’ என்று கொள்ளலாம். இதன்மூலம் ஒருவர், தனது சான்றிதழ்கள், பத்திரங்கள், பிற முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் இலவசம்.

வாகன ஓட்டுநர் உரிமம், வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாம் வைத்துக் கொள்கிற கடவுச்சொல்தான் (பாஸ்வேர்ட்) நுழைவுச் சாவி. இனி, எங்குமே மூலப் பத்திரங்கள் / சான்றிதழ்களைக் கொண்டு போக வேண்டியதில்லை. அனைத்தும் எப்போதும் இந்த இணையப் பெட்டகத்துக்குள் இருக்கும். தேவைப்படும்போது, கைப்பேசி மூலமே எடுத்துக் காட்டலாம்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், தமது ஆவணங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றன. சமீபத்தில், கர்நாடக அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை, இந்த வசதிக்குள் தன்னை இணைத்துக் கொண்டது. இதன் காரணமாக, கர்நாடகாவில், இணையப் பெட்டகம் வைத்திருக்கும் வாகன ஓட்டிகள், தங்களது ஓட்டுநர் உரிமங்களை வண்டியில் வைத்துக்கொண்டு திரிய வேண்டியதில்லை.

இதேபோல, அத்தனை பேரின் ‘ஆதார்’, வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சரி... டிஜி-லாக்கர் வசதியைப் பெற என்ன செய்ய வேண்டும்? முதலில், ஆதார் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும். ஒருவேளை ஆதார் - கைப்பேசி எண், இதுவரை இணைக்கப்படவில்லை என்றால், இதையும் எளிதில் ஓரிரு மணித் துளிகளில் செய்து முடித்து விடலாம்.

டிஜி-லாக்கர் தளத்துக்குச் சென்று பதிவுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்தால், ஆதார் உடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு, ஒருமுறை கடவுச் சொல் (OTP), குறுந்தகவலாக வரும். இதனைக் கொண்டு உள் நுழையலாம் (log-in). வெற்றிகரமாக பதிவு செய்துவிட்ட அந்தக் கணமே, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் திரையில் தெரியும். இதன் பிறகு...? எந்தெந்தத் துறைகள், ‘டிஜி-லாக்கர்' வசதிக்குள் உள்ளன என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது. அந்தத் துறை சார்ந்த எந்த ஆவணத்தையும், சில நொடிகளில், தனிநபர் ‘டிஜி-லாக்கர்' வசதிக்குள் கொண்டு வந்துவிட முடிகிறது.

மூலச் சான்றிதழ் (அ) ஆவணம் வழங்கிய அரசுத் துறையே, இதை டிஜி-லாக்கர் தளத்தில் தருகிறது. ஆகவே, முற்றிலும் அங்கீகரிக்கப்பட்ட முறையான ஆவணம்தான் என்பதையும் இணையப் பெட்டகம் மூலம் உறுதி செய்துகொள்ள முடிகிறது. இதன்மூலம், போலி ஆவணம் அறவே சாத்தியம் இல்லாமல் போகிறது.

2015 ஜூலையில் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1,08,75,080 பயனாளிகள் இருப்பதாக அதிகாரபூர்வ இணையம் தெரிவிக்கிறது. ஒரு கோடியே 43 லட்சம் ஆவணங்கள் பயனாளிகளால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 235 கோடிக்கும் மேற்பட்ட ஆவணங்கள், அரசுத் துறைகளால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆதார் ஆவணங்கள் - 119 கோடி; வருமான வரி பான் தொடர்பாக 30 கோடி; ஓட்டுநர் உரிமங்கள் - 28 கோடி ஆகியன அடங்கும்.

தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்ககம், 2017-ம் ஆண்டுக்கான, 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்களை (மொத்தம் 37,21,029) டிஜி-லாக்கர் தளத்தில் பதிவேற்றி உள்ளது. 1934-ம் ஆண்டு தொடங்கி இதுநாள் வரை, சென்னை மாநகராட்சி வழங்கிய பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் அனைத்தும் (99,13,140), இந்த தளத்தில் கிடைக்கின்றன. பிற அரசுத் துறைகளும் இத்தளத்தில் தமது ஆவணங்களைப் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

குடிமக்கள் அனைவருக்கும் பயன் தரக் கூடியது என்றாலும், இளைஞர்கள்தாம் இங்கே அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். 21-30 வயதினர்தாம் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக, 11-20 வயதினர் வருகிறார்கள். இவ்விரு பிரிவினர் மட்டுமே சுமார் 70% ஆகும்.

இந்த இணையதள பயனாளிகளின் எண்ணிக்கையில், தமிழ்நாடு முதலிடம் பிடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் முறையே, உத்தரபிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் இருக்கின்றன. இதில், இணையக் கையெழுத்து (இ-சைன்) வசதியும் தரப்பட்டுள்ளது. ஆகையால் காகித ஆவணத்துக்கு இனி அவசியமே இராது. சான்றிதழ்கள் தொலைந்து போதல், ஆவணங்களைப் பறிமுதல் செய்துகொண்டு மிரட்டுதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் பழங்கதையாகப் போகிறது.

விண்ணப்பங்கள், சான்றிதழ் நகல்களுக்கு சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) தேவையில்லை; சுயசான்றொப்பம் போதுமானது என்ற அறிவிப்பு; ஐஏஎஸ் போன்ற முதல்நிலைப் பணிகளுக்கு அன்றி, பிற அரசுப் பணிகளுக்கு, நேர்முகத் தேர்வு ரத்து; ஐடிஐ எனும் தொழிற்படிப்புக்கு, ஏனைய கல்வித் தகுதிக்கு இணையான அங்கீகாரம்; அத்தனை கல்விச் சான்றிதழ்களையும், இணையத்திலேயே வைத்துக் கொள்கிற டிஜி-லாக்கர் வசதி... என பல நல்ல செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு, முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது - இவ்வகை முயற்சிகளின் வெற்றியும் தோல்வியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x