Last Updated : 03 Mar, 2018 08:50 PM

 

Published : 03 Mar 2018 08:50 PM
Last Updated : 03 Mar 2018 08:50 PM

திரிபுரா பாஜக ஆட்சி: கால்நூற்றாண்டு ஆட்சியை தாரைவார்த்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மேகாலயா, நாகாலாந்தில் இழுபறி

வடகிழக்கு மாநிலங்களில் முதல்முறையாக பாஜகவின் காவிக்கொடி பறந்து, தாமரை மலரத் தொடங்கி இருக்கிறது.

திரிபுரா மாநிலத்தில் கால்நூறாண்டாக கோலோச்சிவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை  அகற்றிவிட்டு பாஜக, ஐபிஎப்டி கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தன. இதில் திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதேபோல், கடந்த மாதம் 27-ம் தேதி மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. . முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன

இதில் திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டும தேர்தல் நடந்தது. இதில் மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.

அதேசமயம், கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி படுதோல்வியைச் சந்தித்து ஆட்சியை தாரைவார்த்தது. அங்கு முதல்வராக இருந்த மாணிக் சர்க்காருக்கு இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. 59 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

1988ம் ஆண்டு காங்கிரஸ், திரிபுரா உபாஜதி ஜுபா சமிதி கூட்டணியிடம் அடைந்த தோல்விக்கு பின் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தோல்வியைச் சந்திக்கிறது.

திரிபுராவில் மாநிலத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாத பாஜக மாநிலத்தில் திடீரென அசுரவளர்ச்சி பெற்று ஆட்சியைப் பிடித்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. கடந்த 2013ம்ஆண்டு தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளைப் பெற்று மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த பாஜக இன்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மாற்றத்துக்கான ஆட்சியா, அல்லது மக்களின் மனநிலையில் இடதுசாரிகள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியதாகும்.

51 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 35 இடங்களைக் கைப்பற்றி ஏறக்குறைய 42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவர் பிப்லாப் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து திரிபுரா மாநில பாஜக பொறுப்பாளரும, அசாம் மாநில அமைச்சருமான ஹிமாந்த் பிஸ்வா கூறுகையில், ‘ மானிக் சர்க்கார் அரசால் மக்கள் ஒரு வெறுப்பான சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். ஏறக்குறைய 25ஆண்டுகளாக அந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. மாநிலத்தில் உள்ள திரிபுரா மக்கள் முன்னணியுன் பாஜக கூட்டணி வைத்தது எங்களுக்கு உதவியாக இருந்தது. திரிபுராவில் உள்ள பழங்குடி மக்கள் பெரும்பாலானோர் பாஜவுக்கு ஆதரவுதெரிவித்துள்ளனர்’எனத் தெரிவித்தார்.

நாகாலாந்து:

நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டசபையே ஏற்பட்டுள்ளது. ஆனால், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சித் தலைவரும், முதல்வருமான டி.ஆர். ஜிலியாங், பாஜகவுடன் இணைந்துஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக நாகா மக்கள் முன்னணி 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 11 இடங்களில் வென்றுள்ளதால், அங்கு இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

ஆனால், இந்த தேர்தலில், பாஜக, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன்(என்டிபிபி) இணைந்து போட்டியிட்டது. ஆனால், அந்த கட்சியும் 16 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, என்டிபிபி கட்சியுடன் இணைந்து கூட்டும் 27 ஆக வருவதால் யாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கும் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. ஒருவேளை சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக ஆட்சி அமைக்குமா அல்லது நாகா மக்கள் முன்னணியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.

மேகாலயா:

Meghalayajpgமேகலாயா முதல்வர் முகுல் சங்மா வெற்றி பெற்ற மகிழ்ச்சியை தொண்டர்களிடம் வெளிப்படுத்தும் காட்சி100 

மேகாலயா மாநிலத்தில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை 21 இடங்களை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியால் தனிப்பெரும்கட்சியாக வர முடிந்ததேத் தவிர, தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியவில்லை. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளனர்.

பாஜக 2 இடங்களிலும் வடகிழக்கு ஜனநாயக முன்னணியும், தேசிய மக்கள் கட்சி கூட்டணி 19 இடங்களிலும் வென்றுள்ளன. மேலும், இதர சிறிய கட்சிகள் 13 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர்.

இதனால், இங்கு காங்கிரஸ் யாருடன் இணைந்து ஆட்சிஅமைக்கப்போகிறது, அல்லது வடகிழக்கு ஜனநாயக முன்னணியும், தேசிய மக்கள் கட்சி கூட்டணிக்கு பின்புலத்தில் பாஜக இருந்து சுயேட்சைகள், இதர சிறிய கட்சிகளுடன் ஆதருடன் ஆட்சி அமைக்கிறதா என்பது இனிவரும் நாட்களில் தெரியும். மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரை மிகப்பெரிய குதிரைபேரம் இனிவரும் நாட்களில் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் ஷில்லாங் புறட்டுச் சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர்களைச்சந்திக்கும் அவர், பல்வேறு சிறிய கட்சிகலுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பணிகளை கவனிப்பார். மேலும், மாநிலத்தில் தனிப்பெரும்கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், ஆட்சி அமைக்க முதலில் காங்கிரஸ் கட்சியைத்தான் ஆளுநர் அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x