Last Updated : 03 Mar, 2018 05:44 PM

 

Published : 03 Mar 2018 05:44 PM
Last Updated : 03 Mar 2018 05:44 PM

வளர்ச்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்து வெற்றி அளித்துள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ச்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்து திரிபுராவிலும், நாகாலாந்திலும் வெற்றி அளித்துள்ளனர். எதிர்மறையான அரசியலை நிராகரித்துவிட்டனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் திரிபுராவில் பாஜக 43 இடங்களிலும், நாகாலாந்தில் 32 இடங்களிலும் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

திரிபுரா மாநிலத்தில் பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், மீண்டும் மீண்டும் இந்த நாட்டு மக்கள் எங்கள் மீதும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வளர்ச்சி திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து வருகின்றனர்.

எதிர்மறையானவற்றையும் , சீர்குலைக்கும் சக்திகளையும், அரசியலோடு துண்டிக்கும் எந்தவகையான விஷயத்தையும் மக்கள் பார்க்கவும், அதற்கு மதிப்பு கொடுக்கவும் நேரமில்லை.

முரட்டுத்தனமான சக்தியையும், மிரட்டலையும் மீறி ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். அமைதியும், அஹிம்சையும் மக்களின் பயத்தை போக்கிவிட்டன. திரிபுராவில் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் மிகச்சிறந்த அரசை பாஜக வழங்கும்.

நாகாலாந்து மக்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தமைக்கு நன்றியை தெரிவிக்கிறேன். நாகாலாந்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தொடர்ந்து நாங்கள் உழைப்போம் என்று என் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் தெரிவிக்கிறேன். இந்த வெற்றிக்காக கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை பாராட்டுகிறேன். அதேசமயம், மேகாலயவின் நலனும் எப்போதும் எனக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x