Last Updated : 03 Mar, 2018 03:27 PM

 

Published : 03 Mar 2018 03:27 PM
Last Updated : 03 Mar 2018 03:27 PM

சிரியா மக்களுக்காக ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு: தெலங்கானா இளைஞர் தற்கொலை முயற்சி

சிரியாவில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கு ஆதரவாக தெலங்கானா மாநிலம், வாராங்கல் நகரில் ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதிக்காததையடுத்து, இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பேஸ்புக் லைவ் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய அந்த இளைஞர், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரில் அரசுப் படைகளின் குண்டுவீச்சுக்கு கொத்துக்கொத்தாக மடிகிறார்கள். அவர்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்று திரளவேண்டும். இதை வலியுறுத்தி நான் வாராங்கல் நகரில் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த போலீஸிடம் அனுமதி கோரினேன். ஆனால், அவர்கள் அனுமதி தர மறுத்துவிட்டனர் என்று கண்ணீருடன் தெரிவி்த்தார்.

சிரியாவில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசும் கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் இருக்கறது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பின்னர் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து திறந்து ஒரு திரவத்தை குடித்து, சிரியா மக்களுக்காக உதவமுடியவில்லை, என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு அந்த வீடியோவை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து, பேஸ்புக்கில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்த அந்த இடத்துக்கு சென்ற போலீஸார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் நலம் தேறியபின் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், வாராங்கல் நகரைச் சேர்ந்த முகம்மது நயீம் என்பது தெரியவந்தது.

மேலும், வாராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஹக்குலா போர்டா சமிதி அமைப்பின் தலைவர் என்பதும் தெரியவந்தது.

முன்னதாக அன்று காலை வீட்டில் இருந்தபோது, சிரியா போரில் மக்களை யாரும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முகம்மது முயன்று தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சிரியாவில் கடந்த 3 வாரங்களாக அரசுப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கிழக்கு கவுட்டா நகரை மீட்க அரசுப்படைகள் விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x