Published : 03 Mar 2018 12:55 PM
Last Updated : 03 Mar 2018 12:55 PM

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி; பணியும் பாஜக அரசு: சந்திரபாபு நாயுடுவுக்கு தூதுவிட்ட அமித் ஷா

 

ஆந்திராவுக்கு சிறப்பு அளிப்பது குறித்து மார்ச் 5-ம்தேதிக்குள் முடிவு தெரிவிக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கெடு விதித்துஇருந்தார். இதையடுத்து, பாஜக தலைமை அவரிடம் பேச்சு நடத்த அழைப்புவிடுத்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி மூலம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்புகொண்டு ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிப்பது குறித்தும், மத்தியஅரசு அளித்த வாக்குறுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்த அழைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவாக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறந்து அந்தஸ்து அளித்து, நிதி உதவி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், சிறப்பு நிதி தொகுப்புகள், வளர்ச்சி நிதிகள் உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆந்திராவுக்கு அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து மாநிலத்தில் தேர்தலைச் சந்தித்தன. இதில் அமோக வெற்றியும் பெற்றன. இந்நிலையில், கடந்த 4ஆண்டுகளாக மத்திய அரசு தாக்கல் செய்த எந்தபட்ஜெட்டிலும் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு நிதி தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது மோடி அரசின் கடைசி பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டிலும் ஆந்திர மாநிலத்துக்கு எந்த விதமான சிறப்பு அறிவிப்பும் இல்லாததால் அந்த மாநில மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும் அமளியிலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், எந்தவிதமான பலனும் இல்லை.

மேலும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதித் தொகுப்பு அறிவிக்காவிட்டால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இறுதியாக, மார்ச் 5-ம் தேதிக்குள் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து குறித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம் என்று சந்திரபாபு நாயுடு மிரட்டல் விடுத்து இருந்தார்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொலைபேசியில் அழைத்து ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து குறித்து பேச்சு நடத்த அழைத்துள்ளார்.

இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய அறிவில் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சருமான ஓய்.எஸ். சவுத்ரி தலைமையிலான குழு விரைவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவாக இருப்பதால், வேறு வழியின்றி, பாஜக தலைமை சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்து பேச உள்ளது.

இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், ''பாஜக தலைவர் அமித் ஷா மரியாதை நிமித்தமாகவே என்னை அழைத்துப் பேசினார். எந்த காரணத்தைக் கொண்டு ஆந்திர மாநிலத்தின் நலன்களை சமரசம் செய்து கொள்ளமாட்டோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம். அதற்கான அனைத்து அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அளிப்போம்.

எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதி தொகுப்புதான் தேவை. இல்லாவிட்டால், 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத் கூட்டத்தில் எங்கள் எம்.பி.க்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவார்கள்'' எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் சவுத்ரியுடன், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் கிஞ்சாரப்பு ராமமோகன் நாயுடு, மாநில திட்டகுழு துணைத் தலைவர் குடும்ப ராவ், அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.

இதற்கிடையே ராமமோகன் நாயுடு, குடும்ப ராவ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை பாஜக தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து பேசியுள்ளனர். ஆனால், பாஜக தலைவரின் பேச்சு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து அடுத்த கட்டப் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x