Last Updated : 03 Mar, 2018 12:35 PM

 

Published : 03 Mar 2018 12:35 PM
Last Updated : 03 Mar 2018 12:35 PM

டெல்லியில் ஹோலி கொண்டாட்டம்: விதிமீறல்களில் ஈடுபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேக சவாரி செய்தவர்கள் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுடெல்லி போலீஸார் அளித்த விவரம்:

இந்திய பாரம்பரிய பண்டிகையான ஹோலி கொண்டாட்டத்தின்போது, டெல்லி முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 1,900க்கும் மேற்பட்டோர் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 9,300 க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1,918 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதில் 608 பேர் தலைநகரின் தெற்குப் பகுதியிலிருந்து வந்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

4,634 இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இது தவிர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் மூன்றுபேர் அமர்ந்து 1,164 பேர் அதிவேக சவாரியில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் 1,589 பேர் ஏனைய விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஹோலி பண்டிகையின்போது எந்தவொரு விபரீதமான சம்பவத்தையும் தடுப்பதற்காக, புதுடெல்லி போலீஸார் நேற்று விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் நகரில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேக சவாரி செய்வது மற்ற விதிமீறல்களைத் தடுக்க போக்குவரத்துக் காவலர் குழுக்கள், உள்ளூர் காவல் பணியாளர்கள் முக்கியமான சாலை சந்திப்புகளில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு புதுடெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x