Published : 03 Mar 2018 12:13 PM
Last Updated : 03 Mar 2018 12:13 PM

ஊழியர்கள் செய்த மோசடியால் அரசு வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு: ரிசர்வ் வங்கி

அரசு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் மாதம் வரை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கி ஊழியர்கள் மட்டும் ஏறக்குறைய ஆயிரத்து 232 மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் மோசடியிலும், திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் செய்த ரூ.12 ஆயிரம் கோடி மோசடியால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வங்கி ஊழியர்களே கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மக்களை மேலும் நிம்மதியற்ற சூழலுக்கு கொண்டு செல்லும்.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களால் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த மோசடியில் 49 சதவீதம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதாவது, 609 மோசடிகள் நடந்துள்ளன. ஆனால், இதன் மதிப்பை கணக்கிடும் போது, ரூ. 462 கோடி மட்டும்தான்.

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் 3 சதவீதம் மோசடிகள்தான் நடந்துள்ளன. அதாவது 38 வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற போதிலும், அதன் மதிப்பை பொறுத்தவரை ரூ.1,096 கோடியாகும்.

இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகமான அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்தான் அதிகமான பணத்தை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 70 சதீவதம் பணம் இங்கு இழக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின்படி, வங்கியில் நடக்கும் ரூ. ஒரு லட்சம் அதற்கு அதிகமான தொகையுள்ள மோசடிகள் வங்கியில் நடந்தால் அதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், குறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெயர்வெளியிட விரும்பாத வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், ''தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அதிகமான வங்கி மோசடிகள் நடக்க முக்கிய காரணம் அங்கு அதிகமான வங்கிக்கிளைகள் இருப்பதுதான். அதிலும் நகர்ப்புறங்களில் அதிகமான கிளைகள் இருப்பதாகும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அதிகமான டெபாசிட்கள் செய்யப்படுவதும் வங்கி ஊழியர்கள் எளிதாக மோசடி செய்ய காரணமாக அமைகிறது. ஊழியர்கள் குற்றச்செயல்களிலும் மோசடியிலும் ஈடுபட்டால் அதற்கு மன்னிப்பு தரக்கூடாது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x