Last Updated : 03 Mar, 2018 08:56 AM

 

Published : 03 Mar 2018 08:56 AM
Last Updated : 03 Mar 2018 08:56 AM

வடக்கு ரயில்வேயில் பல ஆண்டுகளாக ஊழல்: இல்லாத பணியாளர்களுக்கு ஊதியம்- விஜிலன்ஸ் விசாரணையில் அம்பலம்

வடக்கு ரயில்வே நிர்வாகத்தில், இல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஊழல், விஜிலன்ஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வடக்கு ரயில்வே மண்டலத்தின் டெல்லி கோட்ட மேலாளர் அலுவலகம் டெல்லியில் உள்ளது. இங்கு பணியின்போது இறந்த ஒருவரின் மனைவி கருணை அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரசீது பிரிவில் பணியர்த்தப்பட்டுள்ள இந்தப் பெண்ணுடன் இணைந்து ஒரு பெரிய கும்பல் இல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கி வருவதாக ரயில்வே அமைச்சருக்கு கடந்த ஆண்டு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் விஜிலன்ஸ் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் முதல்கட்ட விசாரணையில் அந்தப் புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இத்துடன் உயரதிகாரிகளின் பரிசீலனைக்கு ரசீதுகளை அனுப்பாமல் அதற்கான தொகை செலுத்தப்பட்டு வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் வடக்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “பணியில் இல்லாதவர்களின் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகள் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். டெல்லி ரயில்வே கோட்ட மேலாளரின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் கடந்த பல ஆண்டுகளின் தணிக்கை அறிக்கைகளையும், பணப்பரிமாற்ற கணக்குகளை யும் முழுமையாக ஆராய்ந்தால் முழு உண்மை வெளியாகும். மேலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர்.

இந்த ஊழல் வெளியானதை தொடர்ந்து, சில முக்கிய கோப்புகளை அனுப்பி வைக்குமாறு வடக்கு ரயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு, வடக்கு ரயில்வே கணக்கு பிரிவின் முதன்மை செயல் இயக்குநர் அஞ்சலி கோயல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சமீபகாலமாக பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் வெளியாகி வருகிறது. இதன் காரணங்களை கண்டுபிடிக்கும் முன்பாக மத்திய அரசின் துறைகளில் ஒன்றான ரயில்வேயில் ஊழல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x