Last Updated : 03 Mar, 2018 08:55 AM

 

Published : 03 Mar 2018 08:55 AM
Last Updated : 03 Mar 2018 08:55 AM

தும்கூரு மாவட்டத்தில் கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா தொடக்கம்: கிராம மக்களின் ஒத்துழைப்பால் நிகழ்ந்த பெரும் சாதனை

உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி ( சோலார்) மின் பூங்கா கர்நாடகாவில் ரூ.16,500 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் முயற்சியாலும், 5 கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், பாவகடா அருகேயுள்ள திருமணி கிராமத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, சூரியஒளி மின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்காவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். ரூ.16,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 20 சதவீத நிதியை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து சித்தராமையா கூறுகையில், “உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பூங்கா அமைப்பதற்கு கர்நாடக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக முயற்சித்தது. அரசு தரப்பில் இருந்து கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கினாலும், இங்குள்ள 5 கிராம மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த திட்டம் சாத்தியம் இல்லை. ஏனென்றால் இந்த திட்டத்துக்காக 2,300 விவசாயிகளிடம் இருந்து 13 ஆயிரம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் வீதம் 28 ஆண்டுகளுக்கு குத்தகை தொகை வழங்கப்படும். 2004-ல் நடந்த நக்சலைட் சண்டையில், கிராமத்தை சேர்ந்த 10 பேர் பலியாகினர். அதன் பிறகு போதிய மழை இல்லாமல், விவசாயம் முழுமையாக பொய்த்து போனது. வறுமையில் வாடும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் 4 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின் பூங்காவில் இருந்து 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது கர்நாடகாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், இதுதான் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்பூங்காவாகும். இந்த சாதனையை பற்றி பிரதமர் மோடியோ, மத்திய அமைச்சர்களோ பேச மறுக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் உள்ள 2 கோடி மக்களும் 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவார்கள். கோடை காலத்தில் தொழிலகங்கள், வீடுகளில் மின் தடை இருக்காது. முதல்கட்டமாக 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிகழாண்டின் இறுதிக்குள் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கர்நாடகா சூரிய ஒளி மின் திட்டத்தின் மூலம், மின் மிகை மாநிலமாக மாறி, நாட்டுக்கே வழிகாட்டுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x