Published : 03 Mar 2018 08:02 AM
Last Updated : 03 Mar 2018 08:02 AM

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் ஆட்சியை பிடிப்பது யார்?: இன்று வாக்கு எண்ணிக்கை

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் திடீரென காலமானார். மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டார்.

அதனால் அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவில்லை. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி (என்டிபிபி) தலைவர் வேட்பாளர் நிபியூ ரியோ, போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதன்படி, திரிபுராவில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதியும் மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. இந்த 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முறை 3 மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பாஜக கடும் போட்டியாக இருந்தது. அதற்கேற்ப திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடையும் என்றும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை பாஜக பறிக்கும் என்றும் 2 கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. அதேபோல் மற்ற 2 மாநிலங்களிலும் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், ஏஜென்டுகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர் தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x