Last Updated : 13 Feb, 2018 01:08 PM

 

Published : 13 Feb 2018 01:08 PM
Last Updated : 13 Feb 2018 01:08 PM

சேலை அணிந்து ஸ்கை டைவிங்: தாய்லாந்தில் இந்தியப் பெண் புதிய சாதனை

மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த சாகசங்களில் ஈடுபடும் பெண் சீத்தல் ரானே மகாஜன் சேலை அணிந்து, 'ஸ்கை டைவிங்'  செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

வழக்கமாக விமானத்தில் இருந்து குதித்து 'ஸ்கை டைவிங்' செய்பவர்கள் அதற்குரிய உடலை ஒட்டிய இறுக்கமான ஆடை அணிந்துதான் குதிப்பார்கள். ஆனால், சீத்தல் ரானே மகாஜன், மஹாரஷ்டிரா பெண்கள் அணியும் 'நவ் வாரி சேலை' அணிந்து விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

பெண்கள் அணியும் வழக்கமான சேலையின் 5.4 மீட்டர் அளவாகத்தான் இருக்கும். ஆனால், மஹாராஷ்டிரா மாநில பெண்கள் அணியும் நவ் வாரி சேலையின் நீளம் 8.25 மீட்டர் இருக்கும். இந்த சேலை அணிவதும், அதை நழுவாமல் பராமரிப்பதும் மிகவும் கடினமானதாகும்.

ரானே மகாஜன் இந்த சாதனையை தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான பட்டாயா நகரில் நேற்று (12-ம்தேதி) செய்தார். விமானத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து நவ் வாரி சேலை அணிந்து ரானே குதித்தார்.

சாதனை நிகழ்த்திய பின் ஸ்கை டைவிங் மையத்தில் இருந்து ரானே மகாஜன் நிருபர்களுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''சர்வதேச மகளிர் தினம் அடுத்த மாதம் வருகிறது. அதற்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என சிந்தித்தேன். வழக்கமாக நாட்டில் பெண்கள் அணியும் சேலைக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரியாக கட்டப்படும் நவ் வாரி சேலை அணிந்து ஸ்கே டைவிங் செய்ய முடிவு செய்தேன்.

வழக்கமான சேலையைக் காட்டிலும் நவ் வாரி சேலை மிகவும் நீளமானது. கட்டுவதும், அதை அவிழ்ந்துவிடாமல் அடிக்கடி சரிசெய்வதும் முக்கியம். இந்த சேலையை அணிந்த பின், விமானத்தில் இருந்து குதிக்கும்போது அவிழ்ந்துவிடாமல் இருக்க, பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தேன்.

இறுக்கமாக சேலையை அணிந்து, ஆங்காங்கே குண்டூசிகளை வைத்து தைத்துக்கொண்டேன். உடலில் இருந்து நழுவும் சாத்தியமுள்ள இடங்களில் எல்லாம் இறுக்கினேன். அதன்பின்தான் குதிக்கத் தயாரானேன்.

இந்தியப் பெண்கள் சேலை அணிந்து தங்களின் வழக்கமான பணியைத் தவிர்த்து, இதுபோன்ற சாதனைகளையும் செய்ய முடியும் என்பதையும் இதன் மூலம் நிரூபித்து இருக்கிறேன். விமானத்தில இருந்து குதிக்கும் இந்த சாகசத்தை கடந்த 11-ம் தேதி செய்ய நினைத்து இருந்தேன். ஆனால், திடீர் மழையும், வானிலையும் சரியில்லாததால், 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தேன்.''

இவ்வாறு ரானே மகாஜன் தெரிவித்தார்.

பத்ம ஸ்ரீ விருது வென்றவரும், 2 மகன்களுக்கு தாயான ரானே மகாஜன், இதுவரை 18 முறை விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்து விருதுகளை வென்றுள்ளார். மேலும், 6 சர்வதேச சாதனைகளையும் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 704 முறை ஸ்கை டைவிங் செய்து, சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம்தேதி முதல் முறையாக அண்டார்டிகாவில் உள்ள வட துருவத்தில் ரானே மகாஜன்  எந்தவிதமான பயிற்சியும் இன்றி மைனஸ் 37 டிகிரி குளிரில் ஸ்கை டைவிங் செய்தார். ரஷ்ய ஹெலிகாப்டரில் இருந்து 2,400 அடி உயரத்தில் இருந்து குதித்து ரானே ஸ்கை டைவிங் செய்த முதல் பெண் எனும் சாதனை படைத்தார்.

2 ஆண்டுகளுக்கு பின் 2006-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி அண்டார்டிகாவில் விமானத்தில் இருந்து 11 ஆயிரத்து 600 அடி உயரத்தில் குதித்தார். இதன் மூலம், உலகிலேயே 23 வயதில் இந்த சாதனையைச் செய்த பெண் எனும் பெருமையை ரானே பெற்றார்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி 750 அடி உயரத்தில், புனே நகரில் ஹாட் ஏர் பலூனில் திருமணம் செய்து கொண்டு ரானே, வித்தியாசமாக சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x