Published : 13 Feb 2018 08:46 AM
Last Updated : 13 Feb 2018 08:46 AM

நாகாலாந்தில் போட்டி வேட்பாளர் மனுவை திரும்பப் பெற்றதால் பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக வாகை சூடினார்

நாகாலாந்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நீபியூ ரியோ (67), வடக்கு அங்கமி-2 தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) உடனான 15 ஆண்டு கால கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது. இதையடுத்து, முன்னாள் முதல் வர் நீபியு ரியோ தலைமையில் புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 60-ல் 40 தொகுதிகளில் என்டிபிபியும் மீதமுள்ள 20-ல் பாஜகவும் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரியோ அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வடக்கு அங்கமி-2 தொகுதியில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து ஆளும் என்பிஎப் சார்பில் சுப்ஃபூ அங்கமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனுத்தாக்கல் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கு நேற்று கடைசி நாளாகும். இந்நிலையில், என்பிஎப் வேட்பாளர் அங்கமி தனது மனுவை திரும்பப் பெற்றதையடுத்து, ரியோ வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அபிஜித் சின்ஹா கூறும்போது, “வடக்கு அங்கமி-2 தொகுதியில் என்பிஎப் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, என்டிபிபி வேட்பாளர் நீபியூ ரியோ வெற்றி பெற்றுள்ளார்” என்றார்.

ரியோ போட்டியின்றி வெற்றி பெறுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரியோ மற்றும் தேரி ஆகிய இருவர் போட்டியின்றி வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை என்டிபிபி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்து ரியோ கூறும்போது, “எனக்கு முன்கூட்டியே வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதன்மூலம் வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது” என்றார்.

என்பிஎப் செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் ஜும்வு கூறும்போது, “எங்கள் கட்சி வேட்பாளர் அங்கமியின் முடிவு ஆச்சரியமாக உள்ளது. வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று கருதி அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்” என்றார்.

1989-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரியோ முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து எஸ்.சி.ஜமிர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார். பின்னர் 1993, 1998, 2002-ல் நடந்த தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி பெற்று பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த 2002-ல் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் என்பிஎப் கட்சியில் சேர்ந்த அவர், கடந்த 2003-ல் நடத்த தேர்தலில் என்பிஎப் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் சார்பில் முதல் முறை யாக முதல்வரானார். பின்னர் 2008 மற்றும் 2013 என அடுத்தடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தார்.

பின்னர் தேசிய அரசியலுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற போதிலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இப் போது வரை அவர் எம்பி பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

இதனிடையே, மாநில அரசியலுக்கு திரும்ப முயற்சி செய்தார். இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், என்பிஎப் கட்சியிலிருந்து விலகி அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட என்டிபிபி கட்சியில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x