Last Updated : 11 Feb, 2018 07:15 PM

 

Published : 11 Feb 2018 07:15 PM
Last Updated : 11 Feb 2018 07:15 PM

ஹெல்மெட் இல்லாமல் வந்தால் பூஜை இல்லை: ஒடிசாவில் பக்தர்களை எச்சரிக்கும் ஆயிரம் ஆண்டு கோயில்

 

ஒடிசா மாநிலம், ஜகட்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால், அவர்களுக்கு பூஜைகள் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபத்துகள் நடப்பது குறைந்துள்ளது.

ஜகட்சிங்பூர் மாவட்டத்தில், பாரதீப் நகர் அருகே ஜான்கட் எனும் இடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'மா சரளா தேவி' கோயில் உள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள மக்களிடையே இந்த கோயில் மிகவும் பிரபலமாகும். மக்கள் வீடுகளில் விழாக்கள், விசேஷங்கள் நடத்தும் முன்னர் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்வர். மேலும், புதிய வாகனங்கள் வாங்கும் மக்களும் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள்,

இதனால், இரு சக்கர வாகனத்தில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். மேலும், ஹெல்மெட் அணியால் இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன.

இதையடுத்து, ஜகட்சிங்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜெய் நாராயண் பங்கஜும், கோயிலின் தலைமை அர்ச்சகர் சுதம் சரண் பாண்டாவும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன்படி, இரு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் அணியாமல் கோயிலுக்கு வந்தால் அவர்களுக்கு பூஜைகள் நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஹெல்மெட் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு பூஜைகள் நடத்தப்படாமல் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், ஒருகட்டத்தில் வேறு வழியின்றி பைக், ஸ்கூட்டர் என இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் அணிந்து கோயிலுக்கு வரத் தொடங்கினர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி. ஜெய் நாராயண் பங்கஜ் கூறுகையில், ''மா சரளா தேவி கோயிலுக்குச் செல்லும் சாலையில் அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்துவந்தன. உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாதவர்களாக இருந்தனர். இதையடுத்து, கோயில் நிர்வாகத்திடம் பேசி, இந்த திட்டத்தைக் கொண்டு வந்தோம். இதற்கு கோயில் நிர்வாகமும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால், இப்போது ஹெல்மெட் இல்லாமல் எந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்வதில்லை. விபத்துகளும் குறைந்துவிட்டன'' எனத் தெரிவித்தார்.

கோயிலின் தலைமை அர்ச்சகர் சுதம் சரண் பாண்டா கூறுகையில், ''இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு பூஜைகள் ஏதும் செய்யமாட்டோம், அவர்களை திருப்பி அனுப்பிவிடுவோம். இந்த விதிமுறையை தீவிரமாக பின்பற்றினோம். இதனால், வேறுவழியின்றி இருசக்கரவாகன ஓட்டிகள் ஹெல்மெட்அணிந்து வரத் தொடங்கினார்கள். விபத்துகளும் 14 சதவீதம் இந்த மாவட்டத்தில் குறைந்துவிட்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதேபோல மற்ற கோயில்களும் சாலை பாதுகாப்புக்கு உதவ தீவிரமாகி வருகின்றன'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x