Last Updated : 11 Feb, 2018 06:24 PM

 

Published : 11 Feb 2018 06:24 PM
Last Updated : 11 Feb 2018 06:24 PM

ஊழலில் பாஜக உலக சாதனை: ராகுல் காந்தி விளாசல்

 

கர்நாடக மாநிலத்தில் ஆளும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஊழல் அற்ற ஆட்சியாகும். ஆனால், இதற்கு முன் நடந்த பாஜக ஆட்சி ஊழலில் உலக சாதனை படைத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தின் தென் மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

கொப்பல் மாவட்டத்தில் 'மக்களிடம் ஆசிர்வாதம்' என்று தேர்தல் பிரசாரத்துக்கு பெயரிட்டு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார். 2-ம் நாளான இன்று, ராகுல் காந்தி மக்களைச் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இதற்காக சிறப்புப் பேருந்து வரவழைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பேருந்தில் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா உள்ளிட்ட தலைவர்கள் உடன் வந்தனர். அவர்களுடன் சாலையில் இறங்கி நடந்து சென்று மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு கோரினார்.

அப்போது மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:

''கர்நாடக மாநிலத்தில் ஆளும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ஆனால், இதற்கு முன் மாநிலத்தில் ஆண்ட 3 முதல்வர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. ஊழலில் பாஜக உலகசாதனை படைத்துவிட்டது.

மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, சுரங்க ஊழலில் இருந்து ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்து கொண்டு இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடகாவில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை.

ஊழல் குறித்துப் பேசும் பிரதமர் மோடி, கர்நாடக மாநிலத்தில் தங்களின் சொந்தக் கட்சியினர் ஆட்சி செய்தபோது, செய்த ஊழல் சாதனையையும் பார்க்க வேண்டும்.

கடந்த பாஜக ஆட்சியில் 3 முதல்வர்களும், 4 அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறைக்குச் சென்றனர். இப்போது இங்கு ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி பேச வேண்டும்.

பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா, சதானந்தா கவுடா, ஜகதீஸ் ஷெட்டர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள். ஊழலில் உலக சாதனை படைத்த பாஜக, எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.

அரசியலமைப்புச்சட்டத்தில் பிரிவு 371-ன் கீழ் கர்நாடக, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மத்திய அரசு விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும்போது, கர்நாடக அரசு விவசாயிகளின் பயிர்ல் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. இதைப் பாராட்டுகிறேன். இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து, ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.''

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x