Published : 11 Feb 2018 08:46 AM
Last Updated : 11 Feb 2018 08:46 AM

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் 2 அதிகாரிகள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப் பின் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் 2 அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறை ஐஜி எஸ்.டி.சிங் ஜமவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஜம்மு அருகே சுஞ்ச்வான் பகுதியில் ராணுவத்தின் 36-வது படை முகாம் உள்ளது. அதிகாலை 4.55 மணிக்கு இந்த முகாம் அருகே சந்தேகப்படும் வகையில் சிலர் நடமாடியதை பாதுகாவலர்கள் கண்டனர். இதனிடையே அவர்களது பதுங்கு குழிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், சுமார் 5 தீவிரவாதிகள், இணை ஆணையர் அதிகாரியின் (ஜெசிஓ) குடியிருப்பில் புகுந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த முகாமை சுற்றி வளைத்தனர். தகவலறிந்த சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 2 வீரர்கள் பலியாயினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறை தலைவர் எஸ்.பி.வைத் கூறும்போது, “தீவிரவாதிகள் முகாமின் பின்புறமுள்ள குடியிருப்பு பகுதி வழியாக உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்” என்றார்.

இந்நிலையில், நேற்று காலையில் காஷ்மீர் சட்டப்பேரவை கூடியதும், தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதுகுறித்து சட்டப்பேரவை யில் அமைச்சர் அப்துல் ரகுமான் வீரி நேற்று கூறும்போது, “தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர் ஜேசிஓ சுபேதார் மதன் லால் சவுத்ரி, மற்றொரு அதிகாரி சுபேதார் முகமது அஷ்ரப் மிர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மதன் லாலின் மகள், கர்னல் ரோஹித் சோலங்கி, ஹவில்தார் அப்துல் ஹமீது மற்றும் லான்ஸ் நாயக் பஹதுர் சிங் ஆகியோர் காயமடைந்தது தெரியவந்துள்ளது” என்றார்.

எனினும், இந்தத் தாக்குதலில் ஒரு அதிகாரி மட்டுமே உயிரிழந்தார் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 வீரர்கள், பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 6 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜ்நாத் சிங் ஆலோசனை

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் மாநில காவல் துறை தலைவர் எஸ்.பி.வைத்துடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தீவிரவாத தாக்குதல் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x