Published : 09 Feb 2018 05:40 PM
Last Updated : 09 Feb 2018 05:40 PM

யோகா, எளிமையான வெஜ். உணவு: தனக்குப் பிடித்த விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்த பிரதமர் மோடி

தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு தன்னுடன் சமையல்காரரைக் கூட்டிச் செல்லும் பழக்கம் இல்லாதவர் பிரதமர் மோடி என்றும், எங்கு சென்றாலும் அங்கு வழங்கப்படும் உணவுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்றும் கல்ஃப் நியூஸ் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடிக்கு இ-மெயில் மூலம் கேள்விகளை அனுப்பி நடத்திய நேர்காணலில் தகவல் பெற்றுள்ளது.

விடுமுறை எனும் ஆடம்பரம் தங்களுக்கு உண்டா என்பது ஒரு கேள்வி, இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “முதல்வராக இருந்த போதும் சரி, இப்போது பிரதமராக இருக்கும் போதும் விடுமுறை என்று எனக்கு எதுவும் கிடையாது. எனது பணியின் நிமித்தமாக நாடு முழுதும் பயணித்து மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களது சந்தோஷங்கள், துக்கங்கள், ஆசைகளை நான் தெரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு புத்துணர்வையும் உத்வேகத்தையும் அளிக்கிறது” என்று பதிலளித்ததாக கல்ஃப் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் குஜராத் முதல்வராவதற்கு முன்பாக இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன்” என்று கூறிய மோடி, அப்போதெல்லாம் பலதரப்பட்ட சமையல்களை ருசித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அயல்நாட்டுப் பயணங்களுக்கு சமையல்காரரை கூட அழைத்துச் செல்வதுண்டா என்ற கேள்விக்கு, “இல்லவேயில்லை. அவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று மகிழ்ச்சியுடன் அனைத்து உணவுகளையும் உண்பேன்.

அதே போல் பிரதமரது காலை வேளை அலுவல்கள் பற்றிய கேள்விக்கு, “காலையில் செய்தித்தாள்களை முழுதும் படிப்பேன். மின்னஞ்சல்களைப் பார்ப்பது, போன்கால்கள், எனது மொபைல் ஆப்-ல் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்ன கூறியிருக்கிறார்கல் என்பதைப் பார்ப்பேன். உறங்கச் செல்லும் முன் அடுத்த நாள் பணிகளுக்குத் தேவையானவற்றை தயாரித்துக் கொள்வேன்” என்றார்.

“அதே போல் படுத்தவுடன் உறங்கிவிடுவேன். என்னுடன் கவலைகளை நான் சுமப்பதில்லை, ஒவ்வொரு காலையும் புத்துணர்வுடன் எழுந்து வாழ்க்கையின் புதிய நாளை வரவேற்பேன்” என்று கூறியதோடு, 4 அல்லது 6 மணி நேரம் உறங்குவதாக தெரிவித்துள்ளார்.

பிடித்த உணவு எது என்ற கேள்விக்கு பெரிய அளவில் உணவுகளில் அக்கறை செலுத்துவதில்லை, எளிமையான வெஜ் உணவு பிடிக்கும் என்றார்.

இன்று காலை கல்ஃப் நியூஸ் எக்ஸ்பிரஸில் மோடியின் இந்த நேர்காணல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x