Last Updated : 05 Feb, 2018 09:12 PM

 

Published : 05 Feb 2018 09:12 PM
Last Updated : 05 Feb 2018 09:12 PM

3,400 ஆண்கள் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் திருமணம்: வரதட்சணைக்கு எதிராக பிஹாரில் துணிகரம்!

பிஹார் மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 400 ஆண்கள் மணமகள் வீட்டாரால் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மணமகள்வீட்டார் வரதட்சணையை தரக்கூடாது என்பதற்காக இதுபோன்ற மிரட்டல் திருமணத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பிஹாரின் மேற்கு பகுதி மாவட்டங்களிலும், உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி மாவட்டங்களிலும் இது அதிமாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இதை பிஹாரில் “பகத்வா விவாஹ்” என்று அழைக்கிறார்கள். இது பிஹார் மாநிலத்தில் மிகப்பிரபலமாகும். இந்த திருமணத்தின் போது, பெரும்பாலும் மணமகன் கடத்தப்பட்டு துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டு அல்லது அவரின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டோ திருமணம் நடக்கின்றன.

இது குறித்து பிஹார் மாநில போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த மாதம்கூட ஒரு பொறியியல் படித்த இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திய ஒரு கும்பல் அவருக்கு மிரட்டி திருமணம்செய்து வைத்தது. இது நாளேடுகளில் பெரிய செய்தியாக வந்தது. ஆனால், இன்னமும் அந்த இளைஞர் அந்த மணப்பெண்ணுடன் வாழ தொடர்ந்து மறுத்து வருகிறார்.

எங்களுக்கு கிடைத்த புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2016ம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் மட்டும் 3,070 இளைஞர்கள் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு 3ஆயிரம் இளைஞர்கள், 2014ம் ஆண்டு2,526 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலின்போது, மாப்பிள்ளையையும், அவரின் பெற்றோரையும் மணப்பெண் வீட்டார் கடத்திவிடுவார்கள். அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியே பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. நாள்ஒன்றுக்கு 9 திருமணங்கள் இதுபோல் நடக்கின்றன.

இந்த மிரட்டல் திருமணத்தை தடுத்தக் கோரி மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களுக்கு அரசு உத்தவிட்டுள்ளது.ஆனால், திருமண சீசன் தொடங்கிவிட்டதால் எத்தனை மாப்பிள்ளைகள் கடத்தப்பட போகிறார்கள் எனத் தெரியவில்லை என போலீஸார் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த கடத்தல் திருமணத்தை ஒழிக்க பாடுபட்டுவரும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த மகேந்தர் யாதவ் கூறுகையில், “ பிஹார் மாநிலத்தில் மாப்பிள்ளைகளை பெண் வீட்டார் கடத்தி திருமணம் செய்துவைப்பது என்பது புதிதல்ல. பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது. பிஹார் மாநிலத்தில் வரதட்சணை கொடுமை அதிகரித்ததன் விளைவாகவே இதுபோன்ற பழக்கம் அதிகமாகிவிட்டது.

மணமகள் வீட்டார், தங்கள் பெண்ணுக்கு தகுந்த மணமகனை பார்த்துமுடிவு செய்துவிட்டால், ஒருநாள் கூட்டமாக வந்து மாப்பிள்ளையையும், அவரின் குடும்பத்தாரையும் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பார்கள். சிலநேரங்களில் மாபியா கும்பலைக் கூட வாடகைக்கு அமர்த்தி மாப்பிள்ளையை கடத்தும் பெண் வீட்டாரும் உண்டு” எனத் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, 18வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அதிகம் கடத்தப்படுவதில் பிஹார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x