Last Updated : 05 Feb, 2018 05:24 PM

 

Published : 05 Feb 2018 05:24 PM
Last Updated : 05 Feb 2018 05:24 PM

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் உரிமம் நிரந்தர ரத்து: மம்தா அரசு உத்தரவு

 

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு உரிமம் அளிக்காததுடன், அபராதம் இட்டு ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத்தில் கடந்த வாரம் ஒரு சோக விபத்து நேர்ந்தது. இதில், பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் தனது செல்போனில் வந்த அழைப்புடன் பேசியபடி இருந்தார். 56 பயணிகளுடன் அப்பேருந்து பலீர்காட் எனும் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த ஒரு லாரிக்கு வழிவிடும் பொருட்டு சற்று அதிகமாக தன் வாகனத்தை ஓட்டுநர் திருப்பியதால் பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு நதியில் பாய்ந்தது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 46 பயணிகள் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர்.

இதன் விசாரணையில் அந்த ஓட்டுநரை செல்போனில் பேச வேண்டாம் என பல பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தியுதும் தெரிய வந்ததுள்ளது. இதனால், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் மீது மம்தா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதன் பலனாக விபத்து நடந்த மூன்றாவது நாளான பிப்ரவரி 1-ல் அம்மாநில அரசின் போக்குவரத்து துறை ஆணையர் பிஸ்வத்ஜித் மிஸ்ரா ஒரு உத்தரவிட்டுள்ளார். அதில், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும், மீண்டும் அவர்களுக்கு உரிமம் அளிக்காமல் இருப்பதுடன் ரூ.1000 அபராதம் அளித்து ஆறு மாதங்கள் வரை சிறை தண்டணை அளிக்கப்பட உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இக்குற்றத்தில் சிக்கும் பேருந்து, லாரி போன்ற கனரக வாகன ஓட்டுநர்களின் உரிமம் முதல்முறையிலேயே ரத்து செய்யப்பட உள்ளது. மற்ற சிறிய நான்கு சக்கர வாகனங்களை செல்போனில் பேசியபடி ஓட்டுவொருக்கு ஒருமுறை மட்டும் எச்சரிக்கையும், அடுத்தமுறை உரிமம் ரத்தும் செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தவறு செய்யும் ஓட்டுநர்களின் வீடியோ பதிவுகளுடன் வாட்ஸ் அப்பில் ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவு இந்தியாவின் முதல் மாநிலமாக மேற்கு வங்கத்தில் இடப்பட்டுள்ளது. மம்தா அரசின் இந்த உத்தரவிற்கு அம்மாநிலப் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்மூலம், வாகனம் ஓட்டியபடி செல்போனில் பேசும் ஆபத்து குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x