Published : 05 Feb 2018 04:04 PM
Last Updated : 05 Feb 2018 04:04 PM

வேலையின்றி இருப்பதை விட பக்கோடா விற்பது மேல்: பிரதமர் பேச்சுக்கு அமித் ஷா விளக்கம்

வேலையின்றி இருப்பதை விட பக்கோடா விற்பது மேலானது, டீ விற்றவர் மகன் நாட்டின் பிரதமராக முடியும் என்றால் பக்கோடா விற்பவர் மிகப் பெரிய தொழிலதிபராக முடியும் என பாஜக தலைவர் அமித் ஷா மாநிலங்களவையில் பேசினார்.

மாநிலங்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதத்தில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு  முதன் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு ஊழல் இல்லாமல் செயல்படும் அரசாக உள்ளது. அதனால் தான், 2014ம் ஆண்டு முதல் பெரும்பாலான தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது.

எதிர்கட்சியாக இருந்தபோது, நாங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்ததாக கூறுவது தவறானது. நாங்கள் அதுபோல ஜிஎஸ்டி வரித்திட்டத்தை எதிர்க்கவில்லை. ஜிஎஸ்டி வரித்திட்டம் புரட்சிகரமான வரி வசூல் திட்டம் ஆகும்.

நாட்டின் பல பகுதிகளில் முன்பு மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பாஜக அரசு இந்த நிலையை தற்போது மாற்றியுள்ளது. விவசாயிகள், கிராமப்புற மக்கள் என பல்வேறு தரப்பினரின் நலனக்காக மத்திய அரசு செயல்படுகிறது.

கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் மக்களை ஈர்க்கும் அரசாக செயல்பட நாங்கள் விரும்பவில்லை. இதுபோன்ற பல அரசுகளை பார்த்த விட்டோம். உண்மையிலேயே மக்களுக்கு தொண்டாற்றவே விரும்கிறோம். நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் நலனை முன்னிட்டே எங்கள் பணி அமைந்துள்ளது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்யமும் பழக்கம் அறவே இல்லாமல் செய்யப்படும்.

வேலையில்லாமல் இருப்பதை விடவும் பக்கோடா விற்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மேலானது. அவர்களை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு சிலர் பேசுவது வேதனையாக உள்ளது. தேனீர் விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராக முடியும் என்றால், பக்கோடா விற்றவர் எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராகவும் வாய்ப்புள்ளது.

இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து எடுத்த துல்லிய தாக்குதல் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது’’ எனக்கூறினார்.

சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் வேலையின்மையைப் பற்றி பேசுகிறார்கள். இந்த சேனலுக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால் கூட நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்கலாம் என்று கூறி இருந்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. பக்கோடா விற்று பணம் சம்பாதிப்பதும் வேலை என்றால், பிச்சை எடுத்து சம்பாதிப்பதும் வேலையா? என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x